ARTICLE AD BOX
இன்றைய காலக்கட்டத்தில் நாம் சந்திக்கும் முக்கிய சவால்களில் உடல் ஆரோக்கியத்தை பேணுவது தான். அலுவலக வேலை, படிப்பு அல்லது சமூக பொறுப்புகளில் மூழ்கி உடலழுத்தத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இதை சமாளிக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். தினசரி உடற்பயிற்சி செய்வது உடலின் சக்தியை அதிகரிக்க மட்டுமல்லாது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கவும் உதவுகிறது.
உடற்பயிற்சியின் பலன்கள் :
* உடற்பயிற்சி ஒரு மருந்து போல செயல்படுகிறது. இது உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் ஆரோக்கியத்தை வழங்குகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலமாக நமது உடலின் மெட்டபாலிசம் சீராகிறது, சுறுசுறுப்பும் கூடுகிறது.
* உடல் எடையை கட்டுப்படுத்தும் – உடற்பயிற்சியின் மூலம் கலோரிகளை செலவழித்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது அதிகபட்சமாக மெட்டபாலிசத்தை (Metabolism) வளர்க்கும்.
* இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் – தினமும் உடற்பயிற்சி செய்தால் இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், மற்றும் கொழுப்புச் சத்து அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.
* எலும்புகளும் தசைகளும் வலுவடையும் – வயது கூடும் போது எலும்புகள் மெலிவதையும், மூட்டு வலியையும் தடுக்க உடற்பயிற்சி உதவுகிறது.
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் – உடற்பயிற்சி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, உடல் நோய்களை எதிர்கொள்வதற்கான சக்தியை அதிகரிக்கிறது.
மனநலத்திற்கும் நல்லது :
உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது.
* மன அழுத்தம் குறையும் – உடற்பயிற்சி செய்தால் எண்டார்பின் (Endorphins) எனப்படும் 'மகிழ்ச்சி ஹார்மோன்' அதிகரிக்கிறது. இது மனச்சோர்வு, கவலை, மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
* உறக்கம் சீராகும் – தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடல் புத்துணர்ச்சி அடைந்து, நச்சுச்சத்துக்கள் வெளியேற்றப்பட்டு, ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது.
* நேர்மறை எண்ணங்கள் உருவாகும் – உடற்பயிற்சி மனதில் ஆற்றல் அளித்து, தினமும் புதிய சந்தோஷத்துடன் நாளை தொடங்க உதவுகிறது.
எளிய உடற்பயிற்சிகள் :
உடற்பயிற்சி என்பது கடினமானதாக இருக்க வேண்டியதில்லை. சில எளிய பயிற்சிகளையும் பின்பற்றலாம்:
* நடைபயிற்சி : தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும். எந்த உடற்பயிற் செய்கிறோமோ இல்லையோ, தினசரி நன்றாக நடந்தாலே உடல் ஆரோக்கியம் சூப்பராக மேம்படும்.
* யோகா : பல்வேறு யோகா ஆசனங்கள் மனதையும் உடலையும் சீர்படுத்த உதவுகிறது. யோகாசனம் நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் மன நலனையும் கூட சிறப்பாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
எளிய செயல்பாடுகள் :
ஸ்க்வாட் (Squats)
லஞ்சஸ் (Lunges)
புஷ்-அப் (Push-ups)
பிளாங்க் (Planks)
* மிதிவண்டி ஓட்டுதல் (Cycling): இது இதய ஆரோக்கியத்தையும், கால் தசைகளையும் பலப்படுத்துகிறது.
* நீச்சல் (Swimming): நீச்சல் ஒரு முழுமையான உடற்பயிற்சி. இது உடல் அனைத்து பகுதிகளையும் செயல்படுத்துகிறது.
* உடற்பயிற்சியை ஒரு வேலையாக நினைத்துச் செய்யாதீர்கள். அதை பழக்கமாக்க முயலுங்கள். அப்போதுதான் அதை ரசித்து செய்ய முடியும்.
* ஒரு திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள் – எப்போது, எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ப செயல்படும் போது அது நமக்கு அலுப்பு தராது.
* மெல்ல மெல்ல ஆரம்பியுங்கள் – ஒரு சேர அதிகம் செய்யாமல், தினசரி சில நிமிடங்கள் தொடங்கலாம். எடுத்ததுமே நீண்ட தூரம் நடப்பது, நீண்ட நேரம் நடப்பது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது.
* துணைக்கு ஆள் சேருங்கள் – நண்பர் அல்லது குடும்பத்தினருடன் உடற்பயிற்சி செய்வது ஊக்கமளிக்கும். காரணம் போரடிக்காமல் பேசிக் கொண்டே செய்யலாம் அல்லது வாக்கிங் போகலாம். இதனால் நடக்கும் சுமை தெரியாது.
* உங்களுக்குப் பிடித்த வகையான உடற்பயிற்சியை தேர்வு செய்யுங்கள் – சுவாரஸ்யமான உடற்பயிற்சிகளை தேர்வு செய்தால் அது பழக்கமாக மாறும். மேலும் எளிதான உடற்பயிற்சியிலிருந்து கடினமானதுக்கு மாறுங்கள்.
* முன்னேற்றத்தைக் கவனியுங்கள் – உடற்பயிற்சி செய்வதால் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படுகிறது என்பதை குறித்து வைத்துக் கொண்டே வாருங்கள். அது உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்.
* உடற்பயிற்சிக்காக ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் செலவிடுவதால் உங்களது எந்த தினசரி வேலையும் கெட்டுப் போகாது. மாறாக, வாழ்க்கையின் தரம் உயரும். ஆரோக்கியமான உணவுகளுடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால் நீண்ட ஆயுளும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும். பிறகென்ன தயக்கம்.. இன்று முடிந்து விட்டது.. நாளையே தொடங்குங்கள், உங்கள் உடல் மற்றும் மனதை புத்துணர்வாக வைத்திருங்கள்.. ஹேப்பியாக வாழுங்கள்.