ARTICLE AD BOX
பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - கலா. இவர்களின் மூன்றாவது மகள் காவியா. இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், காவியா தேர்வு எழுதி வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை காவியாவின் அம்மா கலா நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென இறந்துவிட்டார். கலாவின் திடீர் இறப்பு அந்தக் குடும்பத்தையே நிலையகுலையச் செய்தது. இதனால், காவியா தேர்வு எழுத முடியுமா? என்பதும் கேள்விக்குறியானது.
`படிப்புதான் உன்னை காப்பாத்தும், நான் படிச்சு நல்ல நிலைக்கு வரணும்னு அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கும். அம்மா ஆசைப்பட்டபடி நான் படிக்கணும். அதனால இன்னைக்குத் தேர்வு எழுதப்போறேன்'னு காவியா சொன்னதைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். கலா உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டது. உறவினர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, காவியா தேர்வு எழுதச் செல்வதற்குத் தயாராகினார். யூனிபார்முடன் அம்மா உடல் வைக்கப்பட்ட பெட்டிக்கு முன் வந்து நின்றவர், `நான் பரிட்சை எழுதப்போறேன் என்னை வழியனுப்ப எந்திரிம்மா' எனக் கண்ணாடி பெட்டியில் சாய்ந்து கதறினார். கூடியிருந்த உறவினர்களும் காவியாவை தேற்ற முடியாமல் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. அம்மா இறந்ததை கேள்விபட்ட காவியாவின் நெருங்கிய தோழிகளும் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது காவியாவைக் கட்டியணைத்து ஆறுதல் கூறி காவியாவை தேர்வு எழுத அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து காவியா பேசுகையில், "தினமும் என்னை வழியனுப்பிய அம்மா இன்னைக்கு என் கூட இல்ல. படிப்பு தான் நம்மளோட வாழ்க்கையை மாத்தும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க இனி எங்களுடன் இல்லை என்கிற சோகத்தை தாங்க முடியவில்லை. அம்மா ஆசைப்பட்டதை நிறைவேற்றிட பரீட்சை எழுதி வந்தேன்." என்று அவர் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.