தவெகவில் யாருக்கெல்லாம் பதவி வழங்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இதுகுறித்து பேசிய புஸ்ஸி ஆனந்த் “நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என்றைக்கும் தளபதியின் ரசிகன் என்ற பணிதான் நிலைத்திருக்கும் என்று சொன்னேன்.

அது அப்படியே இருக்கிறதால்தான் இன்று தளபதி என்னை பொதுச்செயலாளர் ஆக்கி இந்த இடத்தில் வைத்துள்ளார்கள். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் அவரை பார்க்க நேரம் கேட்பார்கள். ஆனால் பார்க்கமாட்டார். ஆனால் ஒரு சாரண ரசிகன், கூலியாக இருந்தாலும் ஒரு மணிநேரம் உட்கார வைத்து பேசுவார். அப்படிபட்ட தலைவர் தளபதி மட்டும் தான். உன்னதமான தலைவர்.

இங்கு இருக்கும் நிறைய நிர்வாகிகளுக்கு தெரியும். தளபதியை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் கையால் மோர் ஊற்றிலாம் கொடுப்பார். அந்த கிளாஸ் காணாமல் போயிடும். என்னன்னு பார்த்தா… தலைவா கோவிச்சிக்காத. தளபதி கையால கொடுத்த கிளாஸ். எவ்வளவு கொடுத்தாலும் இத மட்டும் கொடுக்க மாட்டேனு சொல்லிடுவாங்க.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் தொண்டர்கள் தவெகவில் தான் இருக்கிறார்கள். விலையில்லா விருந்தகம் என்ற திட்டம் மூலம் தினமும் காலையில் 150 பேருக்கு உணவு கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தவெக சார்பில் 34 இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இது பொதுக்கூட்டம். இருந்தாலும் சொல்றேன். தளபதி கொடியை அன்று முதல் இன்று வரை யார் பிடித்தார்களோ, யாரெல்லாம் உழைச்சாங்களோ அவங்களுக்குத்தான் தவெகவில் பதவி வழங்கப்படும்.

நீங்களாவே நினைச்சிக்காதீங்க. மற்ற கட்சியிலிருந்து காரில் வந்தால்தான் பதவி என்று. பெரிய பெரிய காரில் வந்தாலும் சரி, ஹெலிகாப்டரில் வந்தாலும் சரி. பதவிகள் கிடையாது. சைக்கிளில் யார் போஸ்டர் ஒட்டி கொடி பிடித்தார்களோ அவர்களுக்கு மட்டும் தான் பதவிகள் வழங்க வேண்டும் என்பது தளபதி போட்ட உத்தரவு. எனவே யாரும் எதற்கும் பயப்பட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.