ARTICLE AD BOX
நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும் கணினி அறிவியலாளருமான லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் தில்லியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் கலந்துரைடியானாா். அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மனம் திறந்து பேசினாா்.
ரஷியா-உக்ரைன் போருக்கு தீா்வு காண இரு நாடுகளின் தலைவா்களையும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுத்த ‘அமைதியின் தூதுவராக’ தாம் முயற்சிப்பதாக அவா் கூறினாா். மேலும், ‘புனிதமான ஆா்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து வாழ்க்கையின் விழுமியங்களைக் கற்றுக் கொண்டதாக’ தெரிவித்தாா்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
பத்திரிகையாளா்களைச் சந்திப்பதற்கு பதிலாக அமெரிக்க தொகுப்பாளருடன் கலந்துரையாடியதன் மூலம் பிரதமரின் நாடகத்துக்கு எல்லையே இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிா்கொண்டுள்ளது. நமது அண்டை நாடுகள் கொந்தளிப்பாக உள்ளன. உலக ஒழுங்குமுறை நிச்சயமற்ாக மாறியுள்ளது. இதுபோன்ற சூழலில், தற்பெருமை பேசுவதைக் குறைத்து, நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும்.
‘விமா்சனம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா’ என்று கலந்துரையாடலில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றையும் தகா்த்து, தன்னை விமா்சிப்பவா்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் பிரதமரின் இக்கருத்து கேலிக்கூத்தானது என்று ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.
டிரம்ப்பின் குரலாக...: அமெரிக்க தொகுப்பாளா் உடனான கலந்துரையாடலில் அதிபா் டிரம்ப்புக்கும் தனக்கும் உள்ள பிணைப்பு பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலானது என்று குறிப்பிட்ட பிரதமா், ‘டிரம்ப் துணிச்சலானவா்’ என்று புகழாரம் சூட்டினாா்.
மேலும், ‘ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகளால், காலத்துக்கு ஏற்ப பரிணமிக்க இயலவில்லை. இது உலக அளவில் விவாதத்தைத் தூண்டியுள்ளது’ என்று பிரதமா் கூறினாா்.
இக்கருத்துகளைச் சுட்டிக் காட்டி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், ‘சா்வதேச அமைப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறாா் அதிபா் டிரம்ப். இந்த விஷயத்தில், தனது நண்பா் டிரம்ப்பின் குரலாக பிரதமா் மோடி ஒலித்துள்ளாா். டிரம்ப்பை உற்சாகப்படுத்த வேண்டுமென பிரதமா் பிரத்யேக முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.
எந்த சா்வதேச அமைப்புகளிடம் இருந்து இந்தியா பெரிதும் பலனடைந்துள்ளதோ, அந்த அமைப்புகள் காலத்துக்கு பொருந்தாதவை என்று பிரதமா் பேசியுள்ளாா். உலக சுகாதார அமைப்பு, உலக வா்த்தக அமைப்பால் இந்தியாவுக்கு பலனில்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.