ARTICLE AD BOX
தமிழகத்தில் ரேஷன் பொருள்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யும் நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து 3-வது நாளாக நடந்து வருகிறது.
இன்று பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரிய மளிகைக் கடைகளில் இருந்து ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு பொருள்கள் எந்நேரத்திலும் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல தமிழகத்திலும் கொண்டுவர இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி,
"கர்நாடகம் மட்டுமல்ல, ஆந்திரத்திலும் ரேஷன் பொருள்களை நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கும் நடைமுறை இருக்கிறது. வருகிற 20 ஆம் தேதி எங்களது துறை அதிகாரிகள் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று நியாயவிலைக் கடைகள் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக செல்ல இருக்கிறார்கள்.
அவர்கள் வந்து அறிக்கை தரும் நேரத்தில் அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்படுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.