ARTICLE AD BOX
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (24.02.2025) பிற்பகல் சுமார் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த திருமலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், செண்பகம் (வயது 35) க/பெ.மேகநாதன் மற்றும் திருமஞ்சு (வயது 33) க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
தருமபுரி பட்டாசு விபத்து
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த சின்னமுறுக்கம்பட்டியில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல குடோனில் செண்பகம், திருமலர் உள்பட நான்கு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று பிற்பகல் நேரத்தில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாக, தீ விபத்து நேரிட்டு, வெடி பொருள்கள் வெடித்துச் சிதறியதில், குடோனில் வேலை செய்த நான்கு பேரில் செண்பகம், திருமலர், திருமஞ்சு ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கிடங்கில் பணியில் இருந்த ஒருவர் மதிய உணவுக்காக வெளியே சென்றதால் அவர் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. வெடிவிபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
பட்டாசுக் கிடங்கு விபத்து குறித்து தகவலறிந்த கம்பைநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.