ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் டெஸ்லா ஆலை? - இந்த இரண்டு நகரங்களில் தான் அமைய வாய்ப்பு என தகவல்..
சென்னை: எலான் மஸ்கிற்கு சொந்தமான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கூடிய விரைவில் இந்தியாவில் தன்னுடைய விற்பனையை தொடங்க இருக்கிறது.
மின்சார கார் விற்பனை மட்டுமில்லாமல் இந்தியாவில் உற்பத்தி ஆலையையும் நிறுவ டெஸ்லா முடிவு செய்துள்ளது. டெஸ்லா ஆலையை எப்படியாவது தங்கள் மாநிலங்களுக்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்,ஆந்திரா ஆகிய மாநிலங்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. டெஸ்லா நிறுவனம் கடற்கரையோரம் இருக்கக்கூடிய நகரத்தில் உற்பத்தி ஆலையை நிறுவுவது தங்களுக்கு உகந்ததாக இருக்கும் என கருதுவதால் இந்த மாநிலங்களுக்கு இடையே போட்டி அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டெஸ்லா நிறுவன ஆலையை தமிழ்நாட்டில் தூத்துக்குடி அல்லது ஓசூரில் அமைப்பதற்கு தீவிரமாக முயற்சி எடுத்து வருவது தெரிய வந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இந்தியாவில் அதிகபட்ச வரி இருப்பதால் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய கார்களை இந்தியாவில் விற்பனை செய்யாமல் இருந்தது.
இந்த நிலையில் அண்மையின் மத்திய அரசு மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக இந்தியாவில் விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தையும் டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கார் விற்பனைக்கு வந்தாலும் இறக்குமதி வரி உள்ளிட்டவையோடு சேர்த்து அதன் விலை அதிகமாக இருக்கும் என்பதால் இந்திய சந்தையில் விற்பனை அதிகரிப்பதற்கு நாட்கள் தேவைப்படும். அதுவே இந்தியாவிலேயே இந்த நிறுவனம் காரை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் போது குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் இந்திய நிறுவனங்களோடு போட்டியிட முடியும். எனவே தான் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார் தயாரிப்பு ஆலை நிறுவுவதற்கும் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசு டெஸ்லா ஆலையை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என தீவிரம் காட்டுகிறது. இதற்காக தொழில்துறை சார்பில் தனி குழுவை அமைத்து டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தொழில்துறை அதிகாரி ஒருவர் அளித்துள்ள தகவலில் கடந்தாண்டு இறுதியில் தமிழக உயர்மட்ட குழு அமெரிக்கா சென்றிருந்தபோதும் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து டெஸ்லா நிறுவனத்திடம் பேசியதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகின்றன, வியட்நாமின் வின்ஃபாஸ்ட் நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் மின்சார கார்கள் தயாரிக்கும் ஆலையை அமைத்து வருகின்றன, அந்த வரிசையில் டெஸ்லா ஆலையை தமிழகத்தில் ஈர்க்க முயற்சி எடுத்து வருகிறோம் என கூறியுள்ளார் . தூத்துக்குடி அல்லது ஓசூர் பகுதியை பரிசீலனையில் வைத்திருப்பதாகவும் டெஸ்லா நிறுவனத்தோடு தொடர்ந்து தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.