ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் கட்டாயம் என்றும், தமிழ் மொழிப் பாடமும், தமிழாசிரியர்களும் இல்லை என ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
2021ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதியிடப்பட்ட இந்த ஆர்.டி.ஐ பதிலில் பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதில் 6 முதல் 8ம் வகுப்புகளில் அந்தந்த மாநில மொழிகள் விருப்ப பாடமாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்ற தகவலும் அதில் தெரிய வந்துள்ளது. 2021ம் ஆண்டு நிலவரப்படி இந்தி ஆசிரியர்கள் 100 பேரும், சமஸ்கிருத ஆசியர்கள் 53 பேரும் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் ஒரே வகுப்பில் படிக்கும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே தமிழாசிரியர் நியமிக்கப்படுவார் என்ற நிலையும் தெரிய வந்துள்ளது. விருப்ப பாடம் என்பதால் 25,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக அடிப்படையில் மட்டுமே தமிழாசிரியர் பணியாற்ற வேண்டும்.
ஒரு பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர் வேறு பள்ளிக்கு மாறினால் ஆசிரியர் இல்லாமல் தமிழ் மொழியை கற்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி விருப்ப பாடமான தமிழ் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறாது என்பதால் மாணவர்கள் தாங்களாகவே தமிழை தவிர்க்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.