சென்னை: நிதி நிர்வாகத்தில் தமிழர்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டனர் , செயல்படுகின்றனர் என்பதை விளக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் நிதித்துறை சார்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் "தமிழர் நிதி நிர்வாகம் : தொன்மையும் தொடர்ச்சியும்" என்ற ஆவண நூலினை வெளியிட்டுள்ளார்.
சங்க காலம் தொடங்கி சமூக நீதிக்காலம் வரையிலான தமிழர்களின் நிதி நிர்வாக சிறப்புகளின் தொகுப்பாகவும், வரலாற்று ஆவணமாகவும் "தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்" என்ற இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. இதில் பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், காலணி கால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீன தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவை ஆராயப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிய தகவல்களும் தரவுகளும் நிறைந்துள்ள இந்த நூல் பல நூற்றாண்டுகளாக தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும் தமிழ்நாட்டின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தை வழங்குகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆவண நூலில் பொருளியல் , வரலாற்று துறைகளை சேர்ந்த தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்று இருப்பதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
இந்த சிறப்புமிக்க நூலினை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். அதனை நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். இது தவிர "தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்" என்ற நூலை ஒட்டி சேகரிக்கப்பட்ட நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள் , மத்திய மாநில திட்ட குழுக்களின் ஆய்வறிக்கைகள் , நிதிநிலை அறிக்கை தொடர்பான செய்தி கட்டுரைகள், நூல்கள், ஒளிப்படங்கள் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
https://www.tamildigitallibrary.in.budget என்ற இந்த சிறப்பு இணையப்பக்கத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொருளியல், சமூகவியல், அரசியல் வரலாறு என பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்த இணைய பக்கத்தில் இருக்கக்கூடிய தகவல்கள் உதவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த இணைய பக்கத்தில் சென்று தமிழர் நிதி நிர்வாக ஆவண நூலையும் மற்ற பிற கட்டுரைகளையும் படித்து தெரிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் , முதலமைச்சரின் துணை செயலாளர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழர்களின் நிதி நிர்வாகத்திலும் தமிழ் பண்பாடு உண்டு, தனித்துவம் உண்டு என்பதை எடுத்துரைக்கும் அழகிய ஆவணம் இது என்றும், துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்த இணையதளமும் இந்த புத்தகமும் உதவியாக அமையும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆய்வாளர்களின் ஆய்வு பணியை எளிதாக்கும் முயற்சியாகவும் இது அமையும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.