ARTICLE AD BOX
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை 19.02.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தைக்; கூட்ட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை ஒன்றிய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த நீடித்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.