ARTICLE AD BOX
Published : 25 Feb 2025 03:40 PM
Last Updated : 25 Feb 2025 03:40 PM
‘தமிழகத்தில் இன்னொரு மொழிப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். வடக்கின் ஆதிக்கத்துக்கு வால் பிடிக்கும் அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி கேட்கின்ற முதல் கேள்வி, ‘இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகம் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?’ என்பதுதான்.
பானை ஓடுகளில் தொடங்கி, இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு வரை தமிழ் மொழி தன் சீரிளமைத் திறம் குறையாமல் செழித்து வளர்ந்திருப்பதற்குக் காரணம், ஆதிக்க மொழியை என்றென்றும் எதிர்த்து நிற்கும் தமிழர்களின் போராட்டக் குணம்தான். தமிழ் மொழியை ஆதிக்க மொழிகளிடம் அடிமைப்படுத்திவிடாமல் காத்து-வளர்த்து, தமிழர்களின் திறனை மேம்படுத்தியதன் விளைவாகத்தான் தமிழகம் இன்று பல இலக்குகளிலும் உயர்ந்து நிற்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை பெருமையுடன் குறிப்பிடுகிறது. நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.
மொழிக் கொள்கையில் தமிழகம் வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் உணர்ந்து வருவதுடன், அதை உரக்க வெளிப்படுத்தும் காலமாகவும் இது அமைந்துள்ளது. தமிழகத்தை வஞ்சிப்பதையே பாஜக தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் இந்தி - சமஸ்கிருதச் சேவகர்களாக இருக்கிறார்கள்.
இந்த மண்ணில் இடக்கினைச் செய்ய நினைக்கும் எதிரியாக ஆரியமோ, ஆதிக்க இந்தியோ - சமஸ்கிருதமோ எதுவாக இருந்தாலும், எத்தனை கோடியை மத்திய அரசு கொட்டிக் கொடுத்தாலும் அவற்றை ஏற்க மாட்டோம். இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்துக்கு இடமில்லை ஓடு என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்கு உண்டு. ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது.
தமிழக மக்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொண்டு, தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்து வரும் போக்கை தமிழகத்தின் பள்ளி மாணவர்களும்கூட தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், பெற்றோர் - ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய அரசு நமக்கு நிதி தர மறுப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, “10 ஆயிரம் கோடி தந்தாலும் இந்தியைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்” என உறுதியுடன் தெரிவித்தேன்.
இதனைக் கேட்ட கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “மத்திய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என்று தன்னுடைய சேமிப்புப் பணமான 10 ஆயிரம் ரூபாயை காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். தன்னுடைய தாத்தாவும் பாட்டியும் தமிழாசிரியர்கள் என்பதையும் குறிப்பிட்டு, ‘தமிழ் வாழ்க’ என்று தன் உணர்வையும் காணொலியாக வெளியிட்டுள்ளார். இதுதான் தமிழக மக்களின் உணர்வு.
ஒரு நன்முகை அல்ல, ஒரு கோடிக்கும் அதிகமான இளம் நன்முகைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழிப் பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்துகொள்வதற்கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? - முத்தரசன் கண்டனம்
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் முதல் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு வரை: சேதி தெரியுமா? @பிப்.18-24
- விருதுநகர்: அஞ்சலக பணம் ரூ.5 கோடி மோசடி; உதவியாளர் கைது
- ‘தமிழக சட்டப்பேரவையில் நாங்கள் செங்கோலை நிறுவுவோம்’ - தமிழிசை சவுந்தரராஜன்