ARTICLE AD BOX
தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வரும் 21ம் தேதி முதல் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இரவு நேரத்தில் பனிபொழிவும், பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை போன்று தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். பிப்ரவரி மாதத்திலேயே வெயில் இப்படி சுட்டெரித்தால் கோடை காலத்தில் இதை விட அதிகமாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அலறுகின்றனர். இந்நிலையில், வரும் 21ம் தேதி முதல் வெப்ப நிலை உயரும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

21 முதல் 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.