தமிழக சட்டசபையில் தவாக வேல்முருகனை ஒருமையில் பேசினீர்களா? சேகர்பாபு சொன்ன பதில் என்ன?

5 hours ago
ARTICLE AD BOX

தமிழக சட்டசபையில் தவாக வேல்முருகனை ஒருமையில் பேசினீர்களா? சேகர்பாபு சொன்ன பதில் என்ன?

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை ஒருமையில் பேசினீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு என்ன பதில் அளித்தார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி சில நாட்களாக சட்டசபை கூடி வருகிறது. அங்கு உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்களும் சில சமயங்களில் முதல்வரோ துணை முதல்வரோ விளக்கம் அளித்து வருகிறார்கள்.

sekar babu velmurugan tamil nadu assembly

அந்த வகையில் நேற்றைய தினம் சட்டசபையில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசினார்.அப்போது அவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் தான் பேச நேரம் தர வேண்டும் என கேட்டு சபாநாயகர் அப்பாவுவின் இருக்கைக்கு சென்று வேல்முருகன் முறையிட்டதாக தெரிகிறது. அப்போது அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், வேல்முருகன் பேசும் போது சபையில் அமர்ந்து கேட்பது வழக்கம்தான். ஆனால் சில நேரங்களில் அதிகபிரசங்கித்தனமாகவும் நடந்து கொள்கிறார். அமைச்சர்களை வேல்முருகன் கை நீட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது ஏற்புடையதும் அல்ல, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்காமல் இறுதி எச்சரிக்கை விடுப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நான் பேச சட்டசபையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் எப்படி பேரவைத் தலைவர் முன்பாக சென்று வாய்ப்பை கொடுங்கள் என கேட்பார்களோ அது போல் நானும் பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு சென்று, "என் கருத்தை முழுவதுமாக பதிவு செய்ய நேரம் கொடுங்கள்" என கேட்டேன்.

அப்போது சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார். அவர் அது போல் பேசுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. நான் அவரிடம் போய் இதுபோல் ஒருமையில் பேசக் கூடாது என கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது சேகர்பாபு என்னை பற்றி தவறான தகவலை சொல்லி, அதை முதல்வரும் தவறாக புரிந்து கொண்டு என்னை அதிகப்பிரசங்கித்தனம் என கூறியது எனக்கு வேதனை அளிக்கிறது.

அதிமுக மக்களுக்கு செய்த துரோகத்தை நான் சொல்வதை சகித்துக் கொள்ள முடியாத கடந்த கால அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த சேகர்பாபு, அதிமுகவை காப்பாற்றுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் தாய்மொழி குறித்தும் நான் பேசிய போது துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் இருக்கும் போது சேகர்பாபுவுக்கு ஏன் கோபம் வருகிறது. நான் பேசுவதில் அவருக்கு என்ன பிரச்சினை? என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து சேகர்பாபு பேசுகையில், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. எதிர்க்கட்சி என்ற இருப்பை காட்டிக் கொள்ள பேசுவதை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்பட போவதில்லை. வேல்முருகன் திமுக கூட்டணியில் தொடர்வாரா என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு, நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

மேலும் வேல்முருகனை ஒருமையில் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சட்டசபையில் பேசியது அத்துடன் முடிந்துவிட்டது. சட்டசபையில் பேசியதை எல்லாம் வெளியே சொல்வது சபை மரபு அல்ல, சபை நாகரீகம் அல்ல என தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
English summary
Minister Sekar babu replies for the question about Tamilaga Vazhvurimai Katchi Velmurugan.
Read Entire Article