ARTICLE AD BOX
நம்மை விட மற்றவர் சிறந்தவர் என்ற எண்ணம் எழவே கூடாது. நாம் எவருக்கும் குறைந்தவரில்லை என்று நினைப்பது மூலம்தான் நம்மை நாமே உயர்த்திக்கொள்ள வழி கிடைக்கும். அன்று முதல் இன்றுவரை தன்னம்பிக்கை கொண்டவர்களே வெற்றியாளர்களாக வெளிவந்துள்ளனர். நான் யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணம் மனதில் திடமாக இருக்கவேண்டும்.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒரு திறன் மறைந்திருக்கும். உங்களுள் உள்ள திறமை மற்றும் அதன் பலத்தை முழு அளவில் ஆய்வு செய்து செயல்படுத்தினால் எந்தக் காரியத்திலும் வெற்றி நிச்சயம்.
திறனறிந்து செயல்படும் போதுதான் பெருமை உங்களைச் சேரும். உங்களது வெற்றியை நீங்களே மதிப்பீடு செய்யும் போதுதான் மீண்டும் ஒரு வெற்றிக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்.
உங்களை உங்களுக்குள்ள சமூக அந்தஸ்தை முன்வைத்தே செயல்பட வேண்டும். 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்' என்ற பாடலின் உள்ளர்த்தம் உணர்ந்தாலே தன்னம்பிக்கை தானே வளரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டால் அப்போது அடுத்தவர் எப்படி உங்களை உயர்வாகக் கருதமுடியும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதித்து செயல்படுத்த வேண்டும்.
உங்களின் எதிர்கால இலக்கை எட்டும்போது உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்தவர் பாராட்டுக்கு நிச்சயம் ஆளாவீர்கள். அடுத்தவரின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவராக நீங்கள் விளங்க வேண்டும் என்று நினைத்தாலே போதும், உங்களைச் சூழும் தவறான செயல்கள் விலகும்.
பேசும்போது கூடியவரை எல்லா விஷயங்களுமே நிறைவேறக்கூடியவை என்று நினைத்து செயல்பட வேண்டும். உங்களை நீங்களே மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்தவர் மதிக்கத்தக்க மனிதராக நீங்கள் உருவாக முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தோற்றப் பொலிவு மிகவும் முக்கியம். அடுத்தவரின் கேலிக்கு ஆளாகாத அளவில் உங்கள் தோற்றத்தை வைத்துக்கொள்ள வேண்டும். விலகிச் சென்றவரும் விரும்பி நாடக்கூடிய மனிதராக நீங்கள் உருவாக, தோற்றம் மிகவும் முக்கியமானது என்பதை மறக்க வேண்டாம்.
உள்ளதைக் கொண்டு சிறப்பாக நம்மை வெளிக்காட்டிக் கொள்வதே சிறந்த அணுகுமுறை. தோற்றப் பொலிவுக்கு முக்கிய காரணமாக விளங்குவது மனதளவில் நீங்கள் மகிழ்ச்சி கொண்டவராக இருத்தல் வேண்டும். துக்கமோ, கோபமோ உங்களை அணுகாதவரை உயர்வான தோற்றப் பொலிவு கொண்டவர் நீங்கள்தான். அதை எந்த நேரத்திலும் மறந்து விடவேண்டாம்.
பேசும்போது எல்லாமே நடத்திக் காட்டக்கூடியது என்ற எண்ணமும், ஆக்கப் பூர்வ அணுகுமுறையும் அவசியம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எதைப் பற்றிப் பேசினாலும் அதில் எதிர்மறை எண்ணம் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் பேச்சை நீங்கள் நம்பும் போதுதான் அடுத்தவர் உங்களை நம்பத் துவங்குவார்கள் என்ற சிந்தனை மிகவும் அவசியம். 'என்னால் முடியும்', 'எல்லோருடைய விருப்பத்திற்கு உரியவன் நான்' என்பது போன்ற வார்த்தைகள் ஆழ்மனதிலிருந்து வெளிப்படும்போதுதான் உங்கள் தோற்றமும், பேச்சும் ஆக்கப்பூர்வமாக அமையும்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை ஆகியவைதான் நீங்கள் தன்னம்பிக்கை கொண்டவர் என்பதை அடுத்தவருக்கு எடுத்துக் கூறும். தன்னம்பிக்கை கொண்ட எல்லோரும் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கண் பார்வையை நேராக செலுத்திதான் பேசுவர். பேசும்போது பார்வை நழுவும்போது உங்கள் தன்னம்பிக்கையும் உங்களை விட்டு விலகுவதாக அர்த்தம்.
அடுத்தவரை எவ்வித தயக்கமும் இன்றி நேருக்கு நேர் காணும்போதுதான் நாம் தன்னம்பிக்கை கொண்டவர் என்பதை அடுத்தவருக்கு உணர்த்தும் என்பதை மறக்க வேண்டாம்.