ARTICLE AD BOX
கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் விஜயன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சி பொருளாளராக இருந்துள்ளார். இவருக்கு ஜிதேஷ் (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 27ம் தேதி மணிச்சேரியில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையில் சுல்தான் பத்தேரி கூட்டுறவு வங்கியில் ஊழியர்களை நியமனம் செய்வதற்காக பலரிடம் இருந்து விஜயன் ரூ.ஒன்றரை கோடி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விஜயன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் வங்கி ஊழியர் நியமனத்திற்காக பலரிடம் இருந்து பணம் பெற்று, அதனை காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான பாலகிருஷ்ணனிடம் கொடுத்தேன். ஆனால் அவர் பணத்தைப் பெற்றுக் கொண்ட, பின்னர் நியமிக்க முன்வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த காங்கிரஸ் தலைவர் அப்பச்சன் மற்றும் முன்னாள் பொருளாளர் கோபிநாத் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் 3 பேரும் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம் 3 பேருக்கும் முன் ஜாமின் வழங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 3 பேரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி அபச்சன், கோபிநாத் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதயடுத்து பாலகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கூட்டுறவு துறை பதிவாளருக்கு மாநில கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.