தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

3 hours ago
ARTICLE AD BOX

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ரேணுகா. இவர்கள், இருவரும் தங்களது வீடு அமைந்துள்ள பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் சுயதொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த ருக்மாங்கதன் என்பவருக்கும், குணசேகரனுக்கும் விவசாய நிலத்திற்கு வழி விடும் பிரச்னையில் முன் விரோதம் இருந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த ருக்மாங்கதன், பொதுமக்கள் வீடு கட்டி வசிக்கும் பகுதியில் கிராம நத்தம் வகைப்பாடு மனையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி தொழிற்சாலை நடத்துவதாகவும், அதை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த, வழக்கை விசாரித்த நீதிமன்றம் குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தக்கூடாது என்றும், அதை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் வந்தனர். ஆனால், உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருப்பதால், 2 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டனர். இதையடுத்து வருவாய்த்துறையினரும், போலீசாரும் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் வரை நீதிமன்ற தடை உத்தரவு எதுவும் வராததால், செங்கல்பட்டு கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் தலைமையில் திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய் துறையினரும், காவல் துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தண்டலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும், பெண்களும் அந்த வீட்டின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பின்னர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article