ARTICLE AD BOX
தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட படைப்புகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.
தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி சார்பில் ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம்) இன்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியின் வண்ணக் கலைத்துறை, காட்சி வழி தகவல் வடிவமைப்பு துறை, சிற்பக் கலைத்துறை ஆகிய துறைகளில் பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் கலைப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
மாணவர்களின் கை வண்ணத்தில் உருவாகிய ஆயில் கலர், அக்ரிலிக் கலர், நீர் வண்ண ஓவியங்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், விழிப்புணர்வு போஸ்டர்கள், புகைப்படங்கள் மற்றும் கணினி ஓவியங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், படிக்கும் காலத்தில் இதுபோன்ற கண்காட்சி தங்களை ஊக்கப்படுத்தி - உற்சாகப்படுத்துவதாகவும், பொதுமக்கள் ஆர்வத்துடன் எங்கள் ஓவியங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி உருவாகிறது. இதுபோல் கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.