ARTICLE AD BOX
தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக ரூ. 12 கோடியிலான தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கடந்த மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கம் கடத்தல் விவகாரத்தில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை மார்ச் 24-ஆம் தேதி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தன்னிடம் விசாரணை நடத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் வெற்று காகிகதங்களில் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது தன்னை அடித்து துன்புறுத்திய அதிகாரிகள் கன்னத்தில் 10 முதல் 15 முறை அடித்து கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் எனினும், அதிகாரிகளின் இந்த சித்ரவதையை பொருட்படுத்தாமல் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட மறுத்ததாகவும் அவர் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகையின் குற்றச்சாட்டுக்கு மத்தியில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரது கன்னங்களில் கண்களின் கீழ் கருவளையங்கள் இருந்ததையும் பார்க்க முடிந்தது. இதன்மூலம், அவர் உடல்ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.