ARTICLE AD BOX
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நாளுக்குநாள் புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவிர, மாநில அரசியலிலும் ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், ரன்யா ராவ் குறித்து கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் நகரத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யாட்னல் ஆபாசமாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர், “தங்கக் கடத்தலில் சுங்க அதிகாரிகளின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தார். வரவிருக்கும் கூட்டத்தொடரில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயரையும் வெளியிடுவேன்.
தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன். அவர், தங்கத்தை எப்படி உடலில் மறைத்துக்கொண்டு வந்தார் என்பது உட்பட அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யாட்னஸ், இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல்முறையல்ல. 2023ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ’விஷ்கன்யா’ என்று முத்திரை குத்தியதற்காக தேர்தல் ஆணையத்தால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
2020ஆம் ஆண்டில், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கான திருமணத் திட்டத்தை ரத்து செய்யும் முடிவைப் பாராட்டிய யட்னல், "இந்தத் திட்டத்தை விரும்புவோர் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்" என்று கூறினார். அடுத்து, 103 வயதில் இறந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை குடியுரிமைச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டிற்காக, ‘பாகிஸ்தான் முகவர்’ என அவரை விமர்சித்திருந்தார்.