ARTICLE AD BOX
பெங்களூர்,
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது கடந்த 3-ந் தேதி நடிகை ரன்யா ராவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ரூ.12½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.2.67 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
நடிகை ரன்யா ராவின் தந்தை ராமசந்திர ராவ், கர்நாடக போலீசில் டி.ஜி.பி. அந்தஸ்து நிலையில் அதிகாரியாக உள்ளார். அதனால் அவர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது விமான நிலையத்தில் இருந்து வீடு வரை பாதுகாப்புக்கு போலீஸ் கார், காவலர்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. டி.ஜி.பி.யின் மகள் என்பதால் அவரை போலீசார் எங்கும் சோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தனது தந்தையின் பெயரை அவர் தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அவருக்கு டி.ஜி.பி. ராமசந்திர ராவ் உதவி செய்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ரன்யா ராவிற்கு ஜாமீன் வழங்க விசாரணை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது ரன்யா ராவ் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழில் அதிபர் தருண் கொண்டரு ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ரன்யா ராவ் ஜாமின் கேட்டு மனுவை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம், அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. வழக்கில் கைதான மற்றொரு குற்றவாளி தருணை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.