ARTICLE AD BOX
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கக் கட்டிகளை கடத்தி வரும் குருவி போல் நடிகை ரன்யா ராவ் செயல்பட்டு வந்ததும், ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்து கொடுத்தால் அவருக்கு 5 லட்சம் ரூபாயை கடத்தல் கும்பல் கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை கடத்தி வரும்போதெல்லாம் ஏடிஜிபியின் மகள் எனக் கூறி விமான நிலைய சோதனையில் இருந்து நடிகை ரன்யா ராவ் தப்பித்து வந்ததாகவும், இந்த முறை வசமாக சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே விசாரணையில் அவர் ஒரு வருடத்தில் துபாய்க்கு மட்டும் 27 முறை பயணம் செய்ததாகவும் தெரிய வந்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், நடிகை ரன்யா ராவைக் காப்பாற்றும் முயற்சியில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஒய்.பரத் ஷெட்டி, "நடிகை ரன்யா ராவ் பிடிபட்டபோது, பிரச்னையிலிருந்து வெளியேற தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த சில காங்கிரஸ் அமைச்சர்களைத் தொடர்புகொள்ள முயன்றார். அதன்படி, இப்போது இரண்டு அமைச்சர்கள் அவருக்கு உதவ முன்வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிபிஐ இந்த வழக்கை கையகப்படுத்தியுள்ளது. அதிலிருந்து உறுதியான உண்மை ஒன்று வெளிவரும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மாநில பாஜக தலைவர் விஜயேந்திராவும் இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய அமைச்சரின் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர், "ரன்யா ராவ் ரூ.12 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்கத்தை கடத்த அனுமதித்ததாகக் கூறப்படும் அரசாங்க நெறிமுறைகளை அப்பட்டமாக மீறியது. கடந்த காலங்களில் இதைவிட அதிகமாக இருக்கலாம். அரசாங்கத்திற்குள் செல்வாக்குமிக்க நபர்களின் நேரடி ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. முதலமைச்சராக சித்தராமையா இருந்தாலும், சந்தேகத்திற்குரிய அமைச்சர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். CBI இப்போது தலையிடுவதால், அதில் பின்வாங்கப்படலாம். உண்மை வெளிவரும். இதை அரசாங்கம் மூடி மறைக்கும் பட்சத்தில் அது விரைவில் அம்பலமாகும்” என தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, "இப்போது, இது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடட்டும். அதுவரை, இது ஊகம்தான்” எனப் பதிலளித்துள்ளார்.