ARTICLE AD BOX
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன, மூன்று கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன, மேலும் இரண்டு கருத்துக் கணிப்புகள் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, பல கருத்துக் கணிப்புகள் 2020 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறாத நிலையில், காங்கிரஸ் தனது கணக்கைத் திறக்கலாம் என்று கூறுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: Delhi Assembly Elections: Most exit polls give BJP edge, AAP says never right
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது வாக்காளர்களின் நேர்காணல்களின் அடிப்படையில் தேர்தல் கணக்கெடுப்பு முகவர்களால் செய்யப்பட்ட கணிப்புகளாகும்.
இவை உண்மையான முடிவுகளிலிருந்து பரவலாக வேறுபடலாம். 2020 டெல்லி தேர்தலில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தங்கள் கணிப்புகளை தவறாக கணித்தன. மக்களவைத் தேர்தலிலும், சமீபத்தில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் தவறாகப் போய்விட்டன.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/d03fd8b9-fb9.jpg)
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் மை தடவிய விரல்களைக் காட்டினர். (ஆதாரம்: ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் பக்கம்)
புதன்கிழமையன்று வெளியான கருத்துக் கணிப்புகள் தொலைக்காட்சி சேனல்களால் வெளியிடப்படவில்லை. ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் டுடேஸ் சாணக்யா போன்ற முக்கிய ஏஜென்சிகள் தங்கள் கணிப்புகளை வியாழன் அன்று வெளியிடுவதாக தெரிவித்தன.
2020 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை வென்றது, மீதமுள்ள எட்டு இடங்கள் பா.ஜ.க.,வுக்குச் சென்றது.
புதன்கிழமை, மேட்ரைஸ் மற்றும் டி.வி ரிசர்ச் ஆகிய இரண்டு கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நெருங்கிய போட்டியைக் காட்டின. மேட்ரைஸ் பா.ஜ.க + 35-40 இடங்களிலும், ஆம் ஆத்மி 32-37 இடங்களிலும், காங்கிரஸ் 0-1 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறுகிறது. டி.வி ரிசர்ச் பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 36-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 26-34 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/ed145297-338.jpg)
ஆறு கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க வெற்றியைக் கணித்துள்ளன, இதில் சில பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 39-44 இடங்களும், ஆம் ஆத்மி கட்சி 25-28 இடங்களும், காங்கிரசுக்கு 2-3 இடங்களும் கிடைக்கும் என்று சாணக்யா வியூகங்கள் தெரிவித்துள்ளன. பி மார்க் பா.ஜ.க.,வுக்கு 39-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 21-31 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.
பா.ஜ.க கூட்டணி 51 முதல் 60 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 10-19 இடங்களிலும், காங்கிரஸ் 0-1 இடங்களிலும் வெற்றி பெறும் என பீப்பிள்ஸ் பல்ஸ் கூறுகிறது. பீப்பிள்ஸ் இன்சைட் பா.ஜ.க கூட்டணிக்கு 40-44 இடங்களையும், ஆம் ஆத்மிக்கு 25-28 இடங்களையும், காங்கிரசுக்கு 0-1 இடங்களையும் வழங்கியது. ’போல் டைரி’ பா.ஜ.க கூட்டணி 42-50 இடங்களிலும், ஆம் ஆத்மி 18-25 இடங்களிலும், காங்கிரஸ் 0-2 இடங்களிலும் வெல்லும் என்று கூறியது.
ஜே.வி.சி கருத்துக்கணிப்பு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 39-45 இடங்களும், ஆம் ஆத்மி கட்சி 22-31 இடங்களும், காங்கிரஸுக்கு 0-2 இடங்களும் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
இருப்பினும், மற்ற மூன்று ஏஜென்சிகள், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன. ஆம் ஆத்மிக்கு 44-49 இடங்களும், பா.ஜ.க.,வுக்கு 21-25 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என மைண்ட் பிரிங்க் மீடியா தெரிவித்துள்ளது. வீ பிரசிட் ஆம் ஆத்மிக்கு 46-52 இடங்களும், பா.ஜ.க.,வுக்கு 18-23 இடங்களும், காங்கிரஸுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்கிறது. கே.கே ஆய்வுகள் மற்றும் உத்திகள் ஆம் ஆத்மிக்கு 44 இடங்களும், பா.ஜ.க 26 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/26991db1-71b.jpg)
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பாஜக வரவேற்றாலும், ஆம் ஆத்மி அதை நிராகரித்தது. “அது 2013, 2015 அல்லது 2020 ஆக இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும் ஆம் ஆத்மி கட்சி மகத்தான ஆணையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது, இந்த முறையும் வித்தியாசமாக இருக்காது" என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால்... பிப்ரவரி 8ஆம் தேதி, கருத்துக் கணிப்புகள் இன்று காட்டியதை விட எங்கள் வெற்றி மிகவும் அற்புதமானதாக இருக்கும்” என்று டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா கூறினார்.