ARTICLE AD BOX
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந்தேதி வெளியானது. இதில், ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளுக்கு பின்பு, அக்கட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதனால், ஹாட்ரிக் வெற்று பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மியின் கனவு தகர்ந்தது.
இதனை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது? என்பது பா.ஜ.க.வால் 10 நாட்களுக்கும் மேலாக முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, ஷாலிமர் பாக் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக தேர்வு பெற்றார். தொடர்ந்து, துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவை சந்தித்து டெல்லியில் ஆட்சியமைக்க ரேகா குப்தா உரிமை கோரினார்.

இதனை தொடர்ந்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற விழாவில் அவர் முறைப்படி பதவியேற்று கொண்டார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியானாவில் பிறந்தவரான ரேகா குப்தா, கல்லூரி காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டவர்.
அக்கட்சியின் பெண்கள் அணி தலைவராக இருந்தவர். இந்நிலையில், அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், முதல்-மந்திரி பொறுப்புக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காகவும், அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வ நன்றியை நான் தெரிவித்து கொள்கிறேன்.
உங்களுடைய இந்த நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு புதிய சக்தியையும், உந்துதலையும் ஏற்படுத்தி உள்ளது. நான் முழு அளவில் நேர்மையாகவும், ஒருமைப்பாட்டுடனும் மற்றும் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காக, அதிகாரம் பெறுவதற்காக மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.
டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய வாய்ப்பில் நான் முழு அளவில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்றும் அதில் தெரிவித்து உள்ளார். முதல்முறை எம்.எல்.ஏ.வான அவர் டெல்லி முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
முதல்-மந்திரி பதவிக்கான பட்டியலில், முன்னாள் முதல்-மந்திரி சாகேப் சிங் வர்மாவின் மகனான, 2 முறை முன்னாள் மக்களவை எம்.பி.யான பர்வேஷ் வர்மா உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் இருந்தபோது, ரேகா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை முடிவு வெளிவந்து 2 வார காலத்திற்கு பின்பு, நேற்றிரவு திடீரென அவருடைய நியமனம் அமைந்து இருப்பது ஏன்? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. எனினும், இதற்கான பதிலும் கிடைத்துள்ளது.
ஏனெனில், இந்த கால கட்டத்தில் பிரதமர் மோடியின் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க பயணம் அமைந்தது. இதனால், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற வாரிய கூட்டம் நடைபெற முடியாமல் இருந்தது. இதுதவிர, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பா.ஜ.க.வின் முக்கிய பிரசாரத்தில் ஒன்றாக இருந்தது. டெல்லிக்கு ஒரு பெண் முதல்-மந்திரி வேண்டும்.
பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் இருந்தபோதும், பெண் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என முடிவாகி உள்ளது. ரேகா பரவலாக அறியப்படாத முகம் என்ற போதிலும், கட்சி தலைமைக்கு அவருடைய அமைப்பு ரீதியிலான மற்றும் தலைமைத்துவ திறமைகள் பற்றி நன்றாக தெரியும்.
கட்சியின் மகளிரணியில் முன்பு பணியாற்றியதுடன், தலைமைத்துவ பதவிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இதுபற்றி பிரதமர் மோடி குறிப்பிடும்போது, அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் அவர். தீவிர அரசியலில், மாநில அமைப்பில், நகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றி எம்.எல்.ஏ.வாக உயர்ந்துள்ள அவர் தற்போது முதல்-மந்திரியாகவும் வந்துள்ளார் என பெருமையுடன் கூறியுள்ளார்.
அவர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டதும் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கட்சியில் சிறந்த பணியாற்றியதற்காக அடிமட்ட தலைவர்களுக்கு வெகுமதி அளிப்பது என்பது பா.ஜ.க.வின் வழக்கம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையிலும், ரேகா குப்தா டெல்லி முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.