ARTICLE AD BOX
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது? என்பது 10 நாட்களுக்கும் மேலாக முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக தேர்வு பெற்றுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மதியம் 12 மணியளவில், பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியானது. இதற்காக, துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைக்க ரேகா குப்தா உரிமை கோரினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியில் 1 லட்சம் பேர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரியானாவில் பிறந்தவரான ரேகா குப்தா, கல்லூரி காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டவர்.
அக்கட்சியின் பெண்கள் அணி தலைவராக இருந்தவர். சமீபத்திய தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில், அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், முதல்-மந்திரி பொறுப்புக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காகவும், அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வ நன்றியை நான் தெரிவித்து கொள்கிறேன்.
உங்களுடைய இந்த நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு புதிய சக்தியையும், உந்துதலையும் ஏற்படுத்தி உள்ளது. நான் முழு அளவில் நேர்மையாகவும், ஒருமைப்பாட்டுடனும் மற்றும் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காக, அதிகாரம் பெறுவதற்காக மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.
டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய வாய்ப்பில் நான் முழு அளவில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.