ARTICLE AD BOX
தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாஜக சார்பில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வான ரேகா குப்தா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கடந்த 20ஆம் தேதி டெல்லி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, முதல்வர் ரேஸில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஆஷிஷ் சூட் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், ரேகா குப்தா திடீரென தேர்வு செய்யப்பட்டது குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் முன்பு பல சவால்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், கல்காஜி தொகுதியில் வெற்றிபெற்ற அதிஷி, எதிர்க்கட்சித் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், புராரி தொகுதி உறுப்பினர் சஞ்சீவ் ஜா, சட்டமன்ற குழு தலைவர் பதவிக்கு அதிஷி பெயரை முன்மொழிந்தார். தொடர்ந்து, ஆம் ஆத்மியின் இதர சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவராக பெண் ஒருவர் பதவி வகிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கிடையே, சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இதில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.