ARTICLE AD BOX
டிரம்ப் அதிரடி.. இந்தியாவில் வீடு கட்டுபவர்களுக்கு ஜாக்பாட்!
அமெரிக்காவில் புதிய இறக்குமதி வரி அமலுக்கு வரவுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அப்படி அவர் கொண்டு வந்த ஒன்றுதான் ரெசிபிராக்கல் வரிமுறை. அதாவது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகளின் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த புதிய வரிமுறையின் காரணமாக தெற்காசிய நாடுகளில் ஸ்டீல் வினியோகம் அதிகரிக்கும் என்று எஸ்என்பி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா ஸ்டீல் சந்தையில் ஒரு டன் ஸ்டீல் சுமார் 3000 ரூபாய் வரை விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இந்திய ஸ்டீல் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தள்ளுபடி விலையில் ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவதால், பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.

சமீப காலமாக சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ஸ்டீல் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது.
உருண்டையாக உருட்டப்பட்ட ஸ்டீலின் உள்ளூர் விலை ஒரு டன்னுக்கு 52,267 ரூபாயாக சரிந்தது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிக்கான வரியை 25 சதவீதமாக நிர்ணைத்துள்ளார். மார்ச் 12 முதல் இந்த வரி நடைமுறைக்கு வரவுள்ளது. டிரம்பின் நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போரை ஏற்படுத்தியுள்ளன.
"தற்போது இந்தியாவில் உள்ள ஸ்டீல் உற்பத்தியாளர்கள் அதிகரித்த வரும் புவிசார் அரசியல் பதட்டங்களில் சிக்கி தவிக்கின்றனர். இது அவர்களின் எதிர்காலத்திற்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது", என்று எஸ்என்பி குளோபல் ரேட்டிங்ஸ் ஆய்வாளர் ஆயுஷ்மான் பாரதி கூறியுள்ளார்.
25 சதவீத வரி விதிப்பால் ஏற்றுமதி செய்வதில் உள்ள லாபம் குறைந்துவிடும். இதனால் ஏற்றுமதியாளர்கள் வேறு லாபகரமான சந்தையை நோக்கி நகரக்கூடும். அதோடு அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் போட்டியிடுவது பிற நாடுகளுக்கு கடினமாகும். சீனா போன்ற நாடுகள் அதிக அளவில் இரும்பை உற்பத்தி செய்கின்றன. அமெரிக்காவின் வரிகளால், இந்த இரும்பை அவர்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதன் காரணமாக இனிவரும் நாட்களில் இந்தியாவில் ஸ்டீல் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.