ARTICLE AD BOX
அட்ரஸ் இல்லாத கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடை.. வருமான வரித்துறையிடம் சிக்கிய 9,000 பேர்..
தனிநபர் ஒருவர் அரசியல் கட்சிகளுக்கு அவர் நன்கொடையாக வழங்கிய முழு தொகைக்கும் வரி விலக்கு கோரலாம். இதன் மூலம் அவரது வரி வருமானம் குறையும். ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கக்கூடிய தொகைக்கு எந்த உச்ச வரம்பும் இல்லை. தனிநபர் எவ்வளவு வேண்டுமானாலும் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்கலாம். இதனை பயன்படுத்தி சிலர் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2020-21ம் நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை ஆய்வு செய்த போது, 9,000க்கும் மேற்பட்ட நபர்கள் அதிகம் அறியப்படாத அரசியல் கட்சிகளுக்கு ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வழங்கிய நன்கொடைகளுக்கு பிரிவு 80GGC-ன் கீழ் வரி விலக்கு கோரி இருந்தனர். இது வருமான வரித்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

பல நன்கொடையாளர்கள் கட்சியிடமிருந்து பணத்தை ரொக்கமாக திரும்ப பெறுவதற்காக மட்டுமே காசோலைகளை வழங்கியுள்ளனர். அரசியல் கட்சியினர் இதற்காக சேவை கமிஷனாக 1 முதல் 3 சதவீதம் வசூலித்துள்ளனர் என்பதும் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அதிகம் அறியப்படாத அரசியல் கட்சிகளுக்கு ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் நன்கொடை அளித்த ஆயிரக்கணக்கான தனிநபர்களுக்கு வருமான வரித்துறை பல கேள்விகள் அடங்கிய நீண்ட பட்டியலை அனுப்பியுள்ளது.
வருமான வரித்துறை அனுப்பியுள்ள கேள்வி பட்டியலில், அரசியல் கட்சியிலிருந்து உங்களை தொடர்பு கொண்டவர் யார்?, அந்த நபரின் பெயரை குறிப்பிடவும், அந்த கட்சி உங்கள் தொகுதியில் போட்டியிட்டதா?, தேர்தல் அறக்கட்டளையுடன் உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது? போன்ற கடுமையான கேள்விகள் இடம் பெற்றுள்ளது. இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். நன்கொடையை வழங்கியதை வரி செலுத்துவோர் நியாயப்படுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இது தொடர்பாக ஆஷித் கருண்டியா அன் கோ நிறுவனர் ஆஷிஷ் கருண்டியா கூறுகையில், வரி செலுத்துவோர் நன்கொடை வழங்கியதை நியாயப்படுத்த முடியாவிட்டால், அது கடுமையான வரி மற்றும் தண்டனை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வரி விலக்கு மறுப்பு தவிர, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளிடமிருந்து வெளியிடப்படாத ரொக்க ரசீதுகளின் அனுமானத்தின் பேரில் வரி அதிகாரிகள் ஒரே நேரத்தில் வருமானக் கூட்டலை செய்யலாம். தகுதியுள்ள வரி செலுத்துவோர் விளைவுகளை குறைக்க தாமாக முன்வந்து புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்கை தாக்கல் செய்வதை பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.
Story Written: Subramanian