டாஸ்மாக் முறைகேடு.. திமுக ஆட்சியை பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்.. கொந்தளித்த விஜய்!

12 hours ago
ARTICLE AD BOX

டாஸ்மாக் முறைகேடு.. திமுக ஆட்சியை பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்.. கொந்தளித்த விஜய்!

Chennai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் முறைகேடு மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடுகளை செய்ய முடியும் என்று கூறியுள்ள விஜய், திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு அமலாக்கத்துறையின் அறிக்கையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையின் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் டெண்டர் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

tasmac scam vijay dmk

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் எந்த கொள்கை முடிவையும் மாற்றவில்லை. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார். இருந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்துள்ளது. போலி பாட்டில், போலி கேப், போலி ஸ்டிக்கர் மூலம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் பாஜக முன்னின்று விமர்சிக்கிறது என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாதக சீமான், பாமக அன்புமணி உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், டாஸ்மாக் முறைகேடு மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அமலாக்கத்துறை ரெய்டு

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும், திமுக அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள், நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 6ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

விஜய் கொந்தளிப்பு

அச்சோதனையின் முடிவாக, அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பெறப்பட்ட ரூ.10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை, டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் கம்பெனிகள் மூலம் நடந்த முறைகேடுகளைப் பற்றிப் பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு

மேலும், இந்த முறைகேடு பற்றி விளக்கும்போது, நன்கு திட்டமிடப்பட்ட கணக்கில் வராத பணம் ஈட்டுதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பணம் பெறுதல், டிஸ்டில்லரீஸ் கம்பெனிகளுக்கும் பாட்டில் கம்பெனிகளுக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய கூட்டு மூலம் நிதி சம்பந்தமான ஆவணங்கள் தவறாகக் கையாளப்பட்டு மறைமுகமாக அல்லது மறைக்கப்பட்ட முறையில் பணம் வருதல், முறையான ஏய்ப்பு நடந்துள்ளது என்று விவரிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு செய்வதில் கைதேர்ந்தவர்கள்

இதை வைத்துப் பார்க்கையில், முறைகேடு செய்வதில் பெரும் அனுபவம் வாய்ந்த, கைதேர்ந்த மற்றும் நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவே அர்த்தம் கொள்ளத் தோன்றுகிறது. அமலாக்கத் துறை டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், வெற்று விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.

திமுகவின் அதிகார வரலாறு

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர். ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுக-வின் ஆட்சி அதிகார வரலாறு.

திமிங்கிலங்களும் சிக்கும்

அமலாக்கத் துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது. ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான. நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

மக்கள் ஒதுக்குவார்கள்

ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம். இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல. ஆனால், எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதை உறுதி என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
We can write a Literature on DMK's Corruption and Scam Allegations says TVK Leader Vijay on TASMAC Scam
Read Entire Article