டாஸ்மாக் சோதனை.. அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

9 hours ago
ARTICLE AD BOX

மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் அலுவலகங்கள், மது உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

”மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை  விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்'' என்று இந்த் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து வெளியிட்ட  சோதனை தொடர்பான அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது.

கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது'' என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.  

Read Entire Article