ARTICLE AD BOX
டாவோஸ் மாநாட்டில் கலக்கிய மகாராஷ்ட்ரா.. ரூ.6.25 லட்சம் கோடி முதலீடுகளை பெற்று சாதனை..
மகாராஷ்ட்ரா: மகாராஷ்டிரா மாநில அரசு சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரக்கூடிய உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பாக ஆறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய 100 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் தங்கள் மாநிலம் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவுக்கு 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வர இருக்கின்றன என அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமம், எஸ்ஸார் ரினிவபில்ஸ், பாரத் போர்ஜ், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஒலெக்க்ட்ரா கிரீன் டெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மகாராஷ்டிரா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன்படி டாடா குழுமம் மகாராஷ்டிராவில் 30,000 கோடி ரூபாயை மகாராஷ்டிராவில் முதலீடு செய்கிறது. எஸ்ஸார் ரினிவபில்ஸ் நிறுவனம் 8000 கோடி ரூபாயையும், யுபிஎல் நிறுவனம் 6500 கோடியையும் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்துள்ளன.
ஒலெக்ட்ரா கிரீன் டெக் நிறுவனம் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை மகாராஷ்டிராவில் நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் பவர் ஹவுஸ் மகாராஷ்டிரா என கூறியிருக்கும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் இந்தியாவில் டேட்டா மையங்களின் தலைநகரமாக மகாராஷ்டிரா உருவாகி வருகிறது எனக் கூறியுள்ளார் .
தற்போது முதலீடுகளை ஈர்ப்பதில் பல்வேறு மாநிலங்களும் தீவிரமாக போட்டி போடுகின்றன என தெரிவித்துள்ள அவர் இது ஒட்டுமொத்தமாக நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் எனக் கூறினார். 2025 ஆம் நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கர்நாடகா ,குஜராத் ,டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஈர்த்த முதலீடுகளை விட மகாராஷ்டிரா மாநிலம் அதிக முதலீடுகளை ஈர்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலங்களில் மட்டும் 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். மகாராஷ்டிரா தற்போது 500 பில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக இருந்து வருகிறது.
2028ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக மாற்ற வேண்டுமென இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 36 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் தான் இந்த வளர்ச்சி இருப்பதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது. அதாவது மாநிலத்தின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்படாமல் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இருக்கிறது என உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது.
Story written by: Devika