ARTICLE AD BOX
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும், கோட்டூர்புரத்தில் சாலையோரத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் என்பது தெரியவந்தது.
அதே நேரத்தில், ஞானசேகரன் போனில் சார் என்று குறிப்பிட்டு பேசிய நபர், யார் அந்த சார் என்று விசாரிக்க வேண்டும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே போல, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரன் தி.மு.க அமைச்சர்கள் உடன் நெருக்கமானவர் என்றும் அவர் ஒரு தி.மு.க நிர்வாகி என்றும் பா.ஜ.க குற்றம் சாட்டியது. ஆனால், இதற்கு தி.மு.க திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியவல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை, அண்ணா நகர் துணை ஆணையர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான 20 வழக்குகளை சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றக் கோரி பா.ஜ.க வழக்கறிஞர் மோகன் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு தி.மு.க நிர்வாகி. இவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தி.மு.க தொண்டர்கள் என்ற போர்வையில் சரித்தர பதிவேடு குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை அம்பலப்படுத்தி தமிழக அரசு கேலிக் கூத்தாக்கியுள்ளது. எனவே, ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஞானசேகரனுக்கு வியாழக்கிழ்மாஇ (பிப்ரவரி 06) குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்றது. இவருடைய செல்போனில் இருந்து பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட ஆடியோ ஆதாரங்களில் அது ஞானசேகரனுடைய குரல்தானா என்பதை உறுதி செய்ய போலீசார் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.