ARTICLE AD BOX
ஜோலார்பேட்டை: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம் - பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
"என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும் என சத்தம் போட்டேன். ஆனால், அந்த நபர் எனது வலது கையை உடைத்து ரயிலில் இருந்து வெளியில் தள்ளிவிட்டான்" எனக் கூறி கலங்குகிறார் ஆந்திராவை சேர்ந்த அந்தப் பெண்.
வியாழக்கிழமையன்று காலை (பிப்ரவரி 6) கோவை-திருப்பதி இன்டெர்சிட்டி ரயிலில் வந்த பெண்ணுக்கு ஜோலார்பேட்டை அருகே நேர்ந்த துயரம் இது.
இந்த வழக்கில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்ற நபரை ரயில்வே போலீஸ் கைது செய்துள்ளது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கூறியது என்ன?
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், தனது கணவருடன் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண், கடந்த 6ஆம் தேதி காலை கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் பயணிப்பதற்காக திருப்பூரில் ஏறியுள்ளார்.
சித்தூரில் உள்ள தனது தாயைப் பார்ப்பதற்காக அவர் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொண்டுள்ளார்.
ரயிலில் என்ன நடந்தது?
ரயிலின் பின்பக்கத்தில் பெண்களுக்கான பொதுப் பெட்டியில் அவர் பயணித்துள்ளார். இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை நெருங்கும்போது அந்தப் பெண் மட்டுமே பெட்டியில் இருந்துள்ளார்.
"காலை 10.45 மணியளவில் ஜோலார்பேட்டைக்கு ரயில் வந்தபோது என்னுடன் பயணம் செய்த பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டனர். ரயில் கிளம்பும் நேரத்தில் அந்த நபர் ஏறினார். இது பெண்கள் பெட்டி எனக் கூறிவிட்டு உடனே இறங்குமாறு கூறினேன்," என்று கூறுகிறார் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்.
- தலித் பெண் படுகொலை: 'பதவியை ராஜினாமா செய்வேன்' என கூறிய எம்.பி 4 பிப்ரவரி 2025
ஆனால், "அந்த நபரோ, 'தெரியமல் ஏறிவிட்டேன். ரயில் கார்டு கொடியைக் காட்டிவிட்டார். அடுத்து காட்பாடி ஸ்டேஷன் வரும்போது இறங்கிவிடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். அதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது," என பாதிக்கப்பட்ட பெண் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், "ரயில் பெட்டியில் அங்கும் இங்கும் அவன் உலாவிக் கொண்டிருந்தான். பிறகு பாத்ரூமுக்குள் சென்று ஆடையைக் கழட்டிவிட்டு வந்தான்.
என்னுடைய ஆடையைக் கழட்ட முயற்சி செய்தான். 'என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும். இப்படியெல்லாம் பண்ண வேண்டாம்' என சத்தம் போட்டேன். ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயன்றேன். அதற்குள் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்தான்" என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த நபரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியாக கழிவறைக்குள் செல்லவும் அந்தப் பெண் முயன்றுள்ளார்.
"என்னை ரயில் படிக்கட்டுக்கு அருகில் வைத்து அடித்தான். வலது கையை உடைத்தான். அவனிடம் இருந்து தப்பிக்க பத்து நிமிடம் வரை பேராடினேன். திடீரென எட்டி உதைத்தான். அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை" என அவர் கூறியுள்ளார்.
- ஆவணமற்ற இந்திய குடியேறிகளை கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பியது பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் பிடிபடுவது எப்படி? அவர்களை நாடு கடத்தும் முடிவை எடுப்பது யார்?5 மணி நேரங்களுக்கு முன்னர்
'அரை மணிநேர போராட்டம்'
இதே தகவலை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் கடுமையாகப் போராடியதாகவும் உதவி கேட்டு சத்தம் போட்டதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நபர் கீழே தள்ளிவிட்டதில் லத்தேரி என்ற ரயில் நிலையத்தில் அந்தப் பெண் விழுந்திருக்கிறார். தலை, கை, கால் என பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
"ஜோலார்பேட்டையில் ரயில் நகரத் தொடங்கிய நொடியில் இருந்து அரை மணிநேரம் அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடினேன். வேறு எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது. இப்படிப்பட்ட நபர்கள் வெளியிலேயே நடமாடக்கூடாது" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
- 'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள் 7 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழ்நாடு அரசின் மீதான விமர்சனம்
ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஆளும் கட்சியை அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
"கர்ப்பிணிப் பெண் என்றுகூடப் பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரயிலில்கூட பெண்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் காட்பாடியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்துள்ளனர்.
விசாரணை முடிவில் கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஹேமந்த் ராஜ் என்பது தெரிய வந்தது. அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
இந்த நபர் மீது, இளம்பெண் ஒருவரைத் தாக்கி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டது, பெண் ஒருவரைக் கொலை செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
- திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர்
தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
ஏற்பு மற்றும் தொடரவும்Twitter பதிவின் முடிவு
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Twitterவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.கர்ப்பிணிப் பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், தமிழ்நாட்டில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகக் கூறியுள்ளது.
தமிழ்நாடு டிஜிபிக்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உள்பட விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)