ARTICLE AD BOX

முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ரஜினிகாந்த் கூறிய தகவல் காண்போம்..
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
1991-96, 2002-06 மற்றும் 2011-14 ஆகிய காலகட்டங்களில் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரு ஆற்றல் மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க தலைவராக நினைவுகூரப்படுகிறார்.
அவரது ஆட்சிக் காலத்தில், குறிப்பாக ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், அவர் கொண்டு வந்த கொள்கைகளுக்காக மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு சிறந்த நடிகையாக இருந்த ஜெயலலிதா, 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் 1982-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சேர்ந்தார், விரைவாக முக்கியத்துவம் பெற்று, 1983-ல் கட்சியின் பிரச்சார செயலாளரானார். அவர் ராஜ்யசபா உறுப்பினராகவும், பின்னர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் தனது அரசியல் வாழ்க்கையில் பணியாற்றினார்.
அவர் தனது அரசியல் பயணத்தில் சட்டப் போராட்டங்கள் மற்றும் சிறைவாசம் உட்பட பல சவால்களையும் எதிர்கொண்டார். இதையடுத்து 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது புகழ் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‘இந்த போயஸ் கார்டன் வீட்டுக்கு நான் நான்காவது முறையாக வருகிறேன். ஜெயலலிதாவுடன் நான் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது, முதல் முறையாக அவரை சந்தித்துப் பேசினேன்.
இரண்டாவது முறை என்னுடைய ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழாவுக்கு அழைப்பதற்காக வந்திருந்தேன். அதன் பிறகு, என் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன். இப்போது, நான்காவது முறையாக வருகிறேன்.
ஜெயலலிதா மறைந்தாலும், அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறேன்’ என்றார்.

The post ஜெயலலிதா நினைவுகள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்: ரஜினிகாந்த் பேச்சு appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.