சைனஸ் தொல்லையா? பருவ மாற்றத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழி!

13 hours ago
ARTICLE AD BOX

பருவ கால மாற்றங்கள் வரும்போது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான உடல் நலப் பிரச்சனை சைனஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொல்லையால் அவதிப்படுவதுண்டு. குறிப்பாக, ஏற்கனவே சைனஸ் அல்லது ஒவ்வாமை இருப்பவர்களுக்கு, தலைவலி, மூக்கடைப்பு, சளி போன்ற அறிகுறிகள் வந்து தூக்கத்தைக்கூட கெடுத்துவிடும். ஆனால், இதற்காக வீட்டில் இருந்தபடியே ஒரு எளிய நிவாரணம் காண முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சைனுசைட்டிஸ் என்பது நம்முடைய மண்டைக்குழியில் உள்ள காற்றுப்பைகளில் ஏற்படும் தொற்று காரணமாக உருவாகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு அதிகப்படியான சளி உற்பத்தியாகிறது. இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்குகிறது. பெரும்பாலும் வைரஸ் தொற்றுக்களே இதற்குக் காரணமாக இருந்தாலும், சில சமயங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளும் பங்களிக்கக்கூடும்.

இதன் முக்கிய அறிகுறிகளாக முகத்தில் அழுத்தம் அல்லது அசௌகரியம், மூக்கிலிருந்து சளி ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி, வாசனை தெரியாமல் போவது போன்றவை இருக்கும். இந்த தொல்லை சில நாட்கள் முதல் நீண்ட காலம் வரை நீடிக்கலாம். மூக்கின் பிரச்னைகள், சளி மற்றும் ஒவ்வாமை போன்றவை சைனஸ் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு பலவிதமான மருந்துகள் இருந்தாலும், ஒரு எளிய வீட்டு வைத்தியம் மூலம் உடனடி நிவாரணம் பெற முடியும். ஒரு சிறிய துணியில் சில பொருட்களைக் கட்டி, அதை அவ்வப்போது முகர்ந்து பார்ப்பதன் மூலம் சைனஸ் தொல்லையில் இருந்து விடுபடலாம். இந்த எளிய பொட்டலத்தை வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் சுலபம்.

இதற்கு தேவையான பொருட்கள் ஓமம், பச்சை கற்பூரம், யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் சுக்கு. ஒரு ஸ்பூன் ஓமம், இரண்டு கிராம் பச்சை கற்பூரம், இரண்டு சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் ஒரு சிறிய துண்டு சுக்கு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

செய்முறை மிகவும் எளிது. இந்த பொருட்களை எல்லாம் இரண்டு நிமிடம் லேசாக வறுத்து, பின் ஒரு சிறிய காட்டன் துணியில் போட்டு முடிந்து கொள்ளவும். இந்த பொட்டலத்தை கையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது முகர்ந்து பார்க்கவும்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள சுக்கு வீக்கத்தை குறைக்கவும், வலியைப் போக்கவும் உதவும். இதை வறுக்கும்போது வெளியாகும் ஆவி, நாம் சுவாசிக்கும்போது நல்ல நிவாரணம் அளிக்கும். இந்த பொட்டலத்தை முகரும்போது, இதன் குணங்கள் வீக்கத்தைக் குறைத்து, சளியை இளக்கி வெளியேற்ற உதவும். இதனால் மூக்கடைப்பு மற்றும் அழுத்தத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும். இந்த பொருட்களின் கூட்டு மருத்துவ குணங்கள் சைனஸால் ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களையும் போக்கும்.

இதையும் படியுங்கள்:
தக்காளியை சில நாட்கள் கெட்டுப்போகாமல் பத்திரமாக வைக்க சில டிப்ஸ்..!
Sinus

இருப்பினும், இதில் சில பக்க விளைவுகளும் உள்ளன. இந்த பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், மூக்கில் எரிச்சல் ஏற்படலாம். குறிப்பாக யூகலிப்டஸ் எண்ணெய் அதிகமாக சேர்த்தால் எரிச்சல் அதிகமாக இருக்கும். மென்மையான சருமம் உள்ளவர்களுக்கு இந்த எண்ணெய் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். மேலும், சிலருக்கு இந்த மூலிகைகள் ஒவ்வாமையை உண்டாக்கலாம். அப்படி ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக இந்த பொட்டலத்தை முகர்வதை நிறுத்திவிட வேண்டும்.

சைனஸை கட்டுப்படுத்த வேறு சில வழிகளும் உள்ளன. சூடான நீராவி பிடிப்பது, தலையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, சூடான தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது சூப் குடிப்பது போன்றவை நல்ல பலன் அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கடை கோதுமை - தலை முடி பிரச்சனை! நடந்தது என்ன?
Sinus
Read Entire Article