சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!

3 days ago
ARTICLE AD BOX

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஜேமி ஸ்மித் 15 ரன்களில் ஆட்டமிழக்க, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.

நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 78 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டி விளையாடிய பென் டக்கெட் 95 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் பென் டக்கெட் அவரது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பென் டக்கெட்டின் இரண்டாவது சதம் இதுவாகும்.

இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் ஹாரி ப்ரூக் 3 ரன்கள், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆடம் ஸாம்பா மற்றும் மார்னஸ் லபுஷேன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

47.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஜோஸ் இங்லீஷ் சிக்ஸர் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். மேலும், ஐசிசி தொடர்களில் 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 345 ரன்கள் இலக்கை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article