செயின் பறிப்பு குற்றவாளி தவெகவில் மாவட்ட செயலாளர்: கட்சி தலைமைக்கு எழுதிய கடிதம் வைரல்

2 hours ago
ARTICLE AD BOX

நாகர்கோவில்: தமிழக வெற்றிக்கழகத்துக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் பல்வேறு மாவட்டங்களில் ஜாதி, பணம் பார்த்து பதவி வழங்கப்படுவதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக எஸ். சபின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை மாவட்ட செயலாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குலசேகரத்தை சேர்ந்த சிவா என்பவர் கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்தக்கு எழுதியதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ‘தவெக கட்சியின் குமரி மாவட்ட தோழர்கள் சார்பில் ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சபின், குறித்த சில விஷயங்கள் உங்கள் கவனத்துக்கு தருகிறேன். 2018ல் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு உள்ளது. செயின் பறிப்பு வழக்கும் கடந்த 2023ல் உள்ளது. இதற்கான எப்.ஐ.ஆர். நம்பரும் இணைத்துள்ளேன். இவை மட்டுமல்ல பல வழக்குகள் உள்ளன. மாவட்ட அளவில் பல வருடமாக தலைவர் விஜய்க்காக உழைத்து ஒரு வழக்கு உள்ளது என்பதற்காக இளைஞர் அணி தலைவராக இருந்தவர் மாற்றப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் நிர்வாகி ஒருவர் நீக்கி வைக்கப்பட்டுள்ளார். சாதி பற்றின் உச்சத்தில் இருக்கும் சபின் மீது நம்பிக்கை வைத்து, இருப்பது நமது கட்சி குமரி மாவட்டத்தில் அழிவை நோக்கி பயணம் செய்ய காரணமாக அமைகிறது. கார் வைத்திருந்தால் மட்டும்தான் கட்சியில் முக்கிய பொறுப்பு தருவேன் என்று பேசுகின்றனர். புதிதாக வந்தவர்கள் எல்லாம் பெரிய பொறுப்புகளில் இருக்கின்றனர். போஸ்டர் ஒட்டிய நாங்கள் அனைவரும் வெளியே நிற்கிறோம். பிப்ரவரி மாதம் தளபதி கையினால் ஆம்புலன்ஸ் கொடுத்து ஏமாற்றினார். இப்போதும் அந்த ஆம்புலன்ஸ் பிரச்னை முடியாமல் உள்ளது. பணம் இல்லாமல் இருந்தாலும் நாங்கள் அனைவரும் களத்தில் அந்த காலம் முதல் உழைத்தோம், ரசிகர் மன்றம் வைத்தோம். எனவே நடுநிலையோடு அனைவரையும் அரவணைத்து பக்குவமாக கட்சி நடத்திட ஒரு தலைவரை மாவட்டத்தில் தர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் உள்ளது.

The post செயின் பறிப்பு குற்றவாளி தவெகவில் மாவட்ட செயலாளர்: கட்சி தலைமைக்கு எழுதிய கடிதம் வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article