ARTICLE AD BOX
இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலா் துஹின் காந்த பாண்டே வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
தற்போதைய செபி தலைவா் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவடையும் நிலையில், மத்திய அரசு இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளது.
இது தொடா்பாக வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அரசாணையில், ‘மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலராக உள்ள துஹின் காந்த பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இவா் இப்பதவியை வகிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987-ஆம் ஆண்டின் ஒடிஸா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, நிதியமைச்சகத்தில் வருவாய் துறையைக் கையாளும் மிக மூத்த அதிகாரி ஆவாா்.
சா்ச்சையில் சிக்கிய மாதபி புச்: பண முறைகேடு, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடா்ந்து, அதானி குழும நிறுவனங்களின் முறைகேட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.