ARTICLE AD BOX

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ரவுடிகள் அருண் குமார் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோர் கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகவும், முக்கிய குற்றவாளியாக சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட அவனது கூட்டாளிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் எனவும் பல்வேறு செய்தி தளங்களில் கூறப்பட்டிருந்தது .
கொலை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள், செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு கொலையாளிகள் சேலம் தப்பி சென்றதாகவும், சேலத்தில் முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது தனியார் செய்தி நிறுவன தகவலின்படி சுக்கு காபி சுரேஷ், விக்னேஷ் , சண்முகம் , ஜீவன், ராசு குட்டி ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 8 பேர் கொலை நிகழ்த்திய கும்பல் எனவும், 5 பேர் கொலைக்கு உதவியாக இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அருண் குமாரின் காதலியை சுக்கு காபி சுரேஷ் கொலை செய்ததாகவும், அதனால் சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டதாகவும், இதில் முந்திக்கொண்ட சுக்கு காபி சுரேஷ் அருணை கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உண்மை தகவல்களை கண்டறிய போலீசார் கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.