சென்னையில் இ-பைக் தீப்பிடித்து விபத்து - 3 பேர் காயம்

23 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

சென்னையை அடுத்த மதுரவாயல், பாக்யலட்சுமி நகர் அன்னை இந்திராகாந்தி தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மகன் கவுதம் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். நடராஜன் தான் பயன்படுத்தி வரும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு நேற்று இரவு 9 மணிக்கு வழக்கம் போல கீழ் தளத்தில் "சார்ஜ்" போட்டுவிட்டு முதல் தளத்திற்கு சென்று தூங்கி விட்டார்.

இந்நிலையில் அதிகாலை 5.15 மணிக்கு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் இருந்து கரும்புகை கிளம்பியதாக தெரிகிறது. இதையறிந்த கவுதம் முதல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பின் தொடர்ந்து கவுதமின் மனைவி மஞ்சு, 9 மாத கைக்குழந்தை எழிலரசியை தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்து ஓடி வந்தார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக பரவிய தீயில் கவுதம், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகிய 3பேரும் தீயில் கருகி படுகாயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து 3 பேரையும் மீட்டனர். இதில் 50 சதவீதம் தீக்காயமடைந்த கைக்குழந்தை மற்றும் லேசான காயமடைந்த கவுதமின் மனைவி மஞ்சு இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

41 சதவீத காயமடைந்த கவுதமிற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜில் போட்ட எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து 3 பேர் உடல் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Read Entire Article