சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் இதுதான் - சிஎஸ்கே முன்னாள் வீரர்

23 hours ago
ARTICLE AD BOX

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இதில் கடந்த 17 சீசன்களாக கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் களமிறங்க உள்ளது.

மறுபுறம் ஐ.பி.எல். தொடரில் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ள சென்னை, மும்பை அணிகள் கடந்த சீசனில் லீக் சுற்றோடு வெளியேறின. அதனால் இந்த முறை கோப்பைக்கு குறிவைத்துள்ளன. அதுபோக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கோப்பையை தக்க வைக்க முழு முயற்சியுடன் போராடும். மற்ற அணிகளும் கோப்பைக்காக வரிந்து கட்டும் என்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு அணியில் எப்போதுமே 2-3 வீரர்கள் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுவதாக சென்னை மற்றும் பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான சதாப் ஜகாதி தெரிவித்துள்ளார். ஆனால் சென்னை அணியில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. நீங்கள் அதில் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அணியாக விளையாட வேண்டும். 2 - 3 வீரர்களால் மட்டும் உங்களுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியாது. சென்னை அணியில் வலுவான இந்திய வீரர்களும் சில நல்ல வெளிநாட்டு வீரர்களும் இருந்தனர். அது போன்ற கலவையை பெறுவது முக்கியம்.

ஆனால் பெங்களூரு அணி என்று வரும்போது அவர்கள் 2 - 3 வீரர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அணி நிர்வாகம் மற்றும் உடைமாற்றும் அறை சூழ்நிலையில் அந்த இரு அணிகளுக்கிடையே பெரிய வித்தியாசம் இருந்தது. பெங்களூரு அணியில் வீரர்கள் மிகவும் நன்றாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கிடையே தோழமை சரியாக இல்லை.

ஏற்கனவே சொன்னது போல் அணி நிர்வாகத்தின் வேலை மிகவும் முக்கியமானது. அந்த வகையில் சென்னை அணி நிர்வாகம் உண்மையில் நன்றாக இருந்தது. அவர்கள் தங்களது வீரர்களை நன்றாக பார்த்துக் கொண்டனர். அது போன்ற சிறிய விஷயங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே இதுதான் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.



Read Entire Article