சென்னை தொழிலதிபர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு; ரூ. 26.53 கோடி மோசடி செய்ததாக புகார்

6 hours ago
ARTICLE AD BOX

மும்பையில் மொத்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 26.53 கோடி மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நான்கு இயக்குநர்கள் மீது மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW), கடந்த செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: 4 directors of Chennai firm booked for ‘duping’ trader of Rs 26.53 crore

 

Advertisment
Advertisement

சென்னையை சேர்ந்த ஸ்ரீநிதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் அங்குராஜ் ராமலிங்கம், சின்னசாமி தண்டபாணி, தனலட்சுமி தண்டபாணி, ரேணுகாதேவி தண்டபாணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பால் பொருட்களின் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள சில்வர்ஸ்டோன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தை நடத்தி வரும் பாந்த்ரா (மேற்கு) பகுதியைச் சேர்ந்த சையத் முடாசர் ஃபிரோஸ் ரிஸ்வி (36) என்பவரின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முதலில் பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி, மார்ச் 2023 இல் பால் பொருட்களுக்கான ஆர்டர்களை வழங்க அங்குராஜ் ராமலிங்கத்தை, ரிஸ்வி தொடர்பு கொண்டார்.

ராமலிங்கத்தின் வேண்டுகோளின்படி, ரிஸ்வி ஏப்ரல் 4, 2023 மற்றும் ஜூலை 20, 2023 க்கு இடையே ரூ. 74.66 கோடியை ராமலிங்கம் மற்றும் ஸ்ரீநிதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளார்.

இதற்குப் பிறகு, ரிஸ்வியின் அறிவுறுத்தலின் பேரில், சோனாய் மற்றும் சிவபிரசாத் பிராண்டுகளின் பால் பொருட்களை ரிஸ்வியின் நிறுவனத்திற்கு வழங்குவது என்று இரு தரப்பினருக்கும் இடையே வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜூலை 20, 2023 முதல் ஆகஸ்ட் 7, 2023 வரை ரூ. 38.73 கோடி மதிப்பிலான பொருட்களை மட்டுமே அவர்கள் வழங்கியுள்ளனர் என்று ரிஸ்வி தனது புகாரில் கூறியுள்ளார்.

பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறி, ரிஸ்வியின் நிறுவனத்துக்கு ரூ. 10.50 கோடியை ஸ்ரீநிதி எண்டர்பிரைசஸ் திருப்பி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மீதமுள்ள பால் பொருட்களை வழங்க வேண்டும் அல்லது மீதமுள்ள மொத்த பணத்தையும் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ரிஸ்வி கோரியுள்ளார். ஆனால், அந்நிறுவனம் இதற்கு செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னையில் அமைந்துள்ள அந்நிறுவனத்திற்கு தனது நண்பர்கள் சிலருடன் ரிஸ்வி வருகை தந்திருக்கிறார். அப்போது, மீதமுள்ள ரூ. 35 கோடியை நான்கு தவணைகளில் திருப்பு செலுத்த வேண்டும் அல்லது அதற்கு ஈடான பால் பொருள்களை ரிஸ்வியின் சில்வர்ஸ்டோன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என இரு தரப்பினரும் ஒப்பந்தம் கையெழுத்திட்டனர் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் 2023-க்கு இடையே, ஸ்ரீநிதி எண்டர்பிரைசஸ் ரூ. 3.96 கோடி மதிப்புள்ள பால் பொருட்களை ரிஸ்விக்கு வழங்கியது. ஆனால், மீண்டும் பால் பொருட்கள் தட்டுப்பாடு எனக் கூறி ரூ. 3.95 கோடியை அவரது நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இதன்பேரில், மீதமுள்ள ரூ. 26.53 கோடியை திருப்பி தருமாறு ராமலிங்கத்திடம், ரிஸ்வி கேட்டுள்ளார். அதற்கு மீதமுள்ள பணத்தை திருப்பிச் செலுத்த இயலாது என தனது வங்கிக் கணக்கின் அறிக்கையை ராமலிங்கம் அனுப்பியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமலிங்கம் அனுப்பிய வங்கி கணக்கு அறிக்கையை ரிஸ்வியின் நிறுவனம் ஆய்வு செய்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் வேறு சில காரணங்களுக்காக தங்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு எதிராக பாரதிய நியாய் சன்ஹிதாவின் பிரிவுகள் 316(5) (கிரிமினல் நம்பிக்கை மீறல்), 318(4) (ஏமாற்றுதல்), மற்றும் 61(2)(குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ்  மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

அங்குராஜ் ராமலிங்கத்தை தொடர்பு கொண்டபோது, ​​தனது நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் "தவறானவை" என்றும் "மோசடி செய்யும் நோக்கம் இல்லை" என்றும் கூறினார்.

"வணிக ஒப்பந்தம் தவறாகி விட்டது. மோசடி செய்யும் நோக்கம் இல்லை. நாங்கள் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைத்தோம். அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்தோம். நாங்கள் புகார்தாரரிடம் விஷயத்தை தீர்த்து வைக்க முன்வந்தோம். எங்கள் சொத்துக்கள் வங்கியில் உள்ளன என்று அவர்களிடம் சொன்னோம். சொத்துக்கள் விடுவிக்கப்பட்டவுடன், நிதிச் சிக்கலை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தோம். இதையும் மீறி மும்பை போலீசார் எங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என அவர் தெரிவித்துள்ளார்.

- Vijay Kumar Yadav

Read Entire Article