ARTICLE AD BOX
Published : 06 Mar 2025 07:40 PM
Last Updated : 06 Mar 2025 07:40 PM
சென்னை எழும்பூர் - கடற்கரை 4-வது பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி!

சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இப்பாதையில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மற்றும் அதிவேக சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். இச்சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4 கி.மீ. தொலைவுக்கு 4-வது பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கலால் பணி தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, தேவையான நிலத்தை பெற்று, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. அண்மையில், இப்பாதையில் 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன.
இந்நிலையில், கடற்கரை - சென்னை எழும்பூர் வரை 4-வது பாதையில், தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் மற்றும் உயரதிகாரிகள் வியாழக்கிழமை காலை ஆய்வு கொண்டனர். மேல்நிலை மின் கம்பிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே 4- வது பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இறுதியில், இந்த ஆய்வு திருப்திகரமாக இருந்ததாகவும், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் கூறுகையில், “இந்த ரயில் தண்டவாளத்தால், பல ரயில்களை இயக்க முடியும். விரைவில், இப்பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எழும்பூரில் இருந்து கடற்கரை வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்கள் இப்பாதையில் அதிக அளவில் இயக்கப்படும்” என்றார்.
பாதுகாப்பு ஆணையர் வருகை: இதையடுத்து, தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி வரும் 9-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள சென்னைக்கு வரவுள்ளார். தண்டவாளம் உள்பட பல்வேறு பாதுகாப்பு விசயங்கள் தொடர்பாக ஆய்வு செய்வார். ஏதாவது, திருத்தம் செய்ய வேண்டுமெனில் அவர் தெரிவிப்பார். அதை சரிசெய்த பிறகு, பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் கொடுப்பார். இதையடுத்து, இப்பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் அதிக அளவில் இயக்க அனுமதிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் இப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை