ARTICLE AD BOX
‘சென்னை ஒரு வாழத்தகுந்த நகரமாக இல்லை.’என பமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகத்தில், “சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தங்கி இருந்து விட்டு, இன்று தைலாபுரம் வந்து சேர்ந்தேன்.
சென்னையில் நான் தங்கியிருந்த நாட்களில் உணர்ந்து கொண்ட உண்மை என்னவென்றால், அது வாழத்தகுதியற்ற மாநகரமாக மாறி விட்டது என்பது தான்.
இந்தியாவில் டெல்லி, அதைச் சுற்றியுள்ள நோய்டா, காசியாபாத், சண்டிகர் ஆகியவை தான் காற்று மாசு, புகை மண்டலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வாழத்தகுதியற்ற நகரங்களாகி விட்டன என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், அந்த நகரங்களின் வரிசையில் சென்னை எப்போதோ இணைந்து விட்டது என்பதை இப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன்.
வாகனப் புகையிலும் புழுதியிலும் சென்னை திணறுகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும் – சென்னை தூய காற்று செயல்திட்டமும் காற்றோடு போய்விட்டன.
சென்னை மாநகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகிறது. பெரும்பாலான மக்களுக்கான பொதுப்போக்குவரத்து வசதிகள் தேவையான அளவில் இல்லை. நடுத்தர மற்றும் ஏழைகளின் முதன்மை போக்குவரத்தான பேருந்துகள் சென்னை மாநகரில் பல பத்தாண்டுகளாக அதிகமாக்கப்படவில்லை.
சென்னை நகரம் முழுவதிலும் தரமான நடைபாதைகள் இல்லை. மிதிவண்டிக்கான வழிகள் எங்குமே இல்லை. சென்னையின் தெருக்கள் எதிலும் தரமான சாலைகள் இல்லை. ஏறக்குறைய எல்லா தெருக்களிலும் ‘ஒட்டுப்போட்ட’ குண்டும் குழியுமான சாலைகளே உள்ளன.
சென்னையின் அனைத்து ஆறுகளும், ஓடைகளும் சாக்கடையாக மாறிவிட்டன.
நகரமெங்கும் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைச்சட்டம் குப்பைக்கு போய்விட்டது.
பல்வேறு பொது இடங்களிலும் தெருவோர தேனீர் விடுதிகளிலும் புகை பிடிக்கும் சட்டவிரோத செயல் இன்னமும் தொடர்கிறது. சிகரெட் விற்கும் எல்லா கடைகளிலும் சட்டவிரோத சிகரெட் விளம்பரங்கள் பல்லிளிக்கின்றன.
சென்னை நகரில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை. அதற்கு நேர் மாறாக பசுமைப் பகுதிகள் அழிக்கப்படுகின்றன.
சென்னை மக்களின் பாதுகாப்புக்கும், பெண்களின் பாதுகாப்புக்கும் கஞ்சாவும், மதுபானமும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மொத்தத்தில் சென்னை மாநகரம் வாழத்தகுந்த நகரமாக இல்லை. அதற்கான முயற்சிகள் எதனையும் இப்போதைய ஆட்சியாளர்கள் ‘உளப்பூர்வமாக’ முன்னெடுக்கவும் இல்லை.
சென்னை எப்போது தான் வாழத் தகுதியான மாநகரமாக மாறும்?" என்று பதிவிட்டுள்ளார்.