ARTICLE AD BOX
அதிமுகவில் அதிகார மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது. நீயா.? நானா.? என்ற போட்டியில் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒவ்வொரு இடத்திலும் அக்கட்சி தலைவர்கள் கொண்டாடுகிறார்கள். அதன் படி ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான சசிகலா மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திமுகவின் விளம்பர அரசியல்
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய சசிகலா, புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த போது முதல் தேர்தல் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் அதில் மகத்தான வெற்றியை தந்தீர்கள். அன்று சுயேட்சை சின்னமாக இரட்டை இலை தேர்தலில் நின்ற போது அமோக வரவேற்பு அளித்து வெற்றி பெற செய்தனர் இந்த உசிலம்பட்டி மக்கள். ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொடுத்துள்ளனர். ஆனால் திமுக மக்களை கசக்கி புளிகிறது. இப்போது திமுக அரசு மக்களுக்காக எதையும் செய்வதில்லை. தற்போது வரை எதுவும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்கின்றனர்.
மீண்டும் அதிமுக ஆட்சி
பெண்கள் வாழ தகுதி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அப்பா வேசம் போட்டு வருகிறார். திமுகவின் வேசம் கலையும் நேரம் வந்துவிட்டது. வரும் தேர்தலில் விளம்பரத்தை வைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என திமுக பகல் கனவு கண்டு வருகின்றனர். எனவே அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம்
யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அனைவரின் எண்ணத்தையும் ஈடேற்றும் வகையில் ஒன்றிணைவோம் என மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளில் நாளில் உறுதி ஏற்போம் என சசிகலா தெரிவித்தார். அதிமுக தான் எனது உயிர் மூச்சு, இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம். ஒன்றிணைக்கும் முயற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். எழுந்து நடந்தால் இமையமும் நம் காலடியில் என சசிகலா தெரிவித்தார்.