ARTICLE AD BOX
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கிய இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இன்று பூமிக்குத் திரும்புகிறார். இந்நிலையில் சுனிமா வில்லியம் விண்வெளியில் இருந்தபோது என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் விண்வெளியில் இருந்து வெளியான சுனிமா வில்லியம்ஸின் புகைப்படம் அவரது உடல்நலம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அவர் உடல் மெலிந்து, குழிவான கன்னங்களுடன் காணப்பட்டார். ஆனால், உணவில் எந்த குறைபாடும் இல்லை என்றும் விண்வெளியில் உள்ள நுண் ஈர்ப்பு விசையின் விளைவாக உடல் எடை குறைந்தது என்றும் நாசா கூறியது.
சுனிதா வில்லியம்ஸ் சாப்பிட்ட உணவுகள்:
சுனிதா வில்லியம்ஸும் அவரது சக விண்வெளி வீரர், வீராங்கனைகளும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வழங்கப்படும் குறைந்த அளவிலான உணவையே உண்கின்றனர். அவர்களின் உணவில் தானியங்கள், பால் பவுடர், பீட்சா, இறால் காக்டெய்ல்கள், வறுத்த கோழி போன்றவை இருக்கும். விஞ்ஞானிகளுக்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாசா உணவுகளை அனுப்பி வைக்கிறது.
விண்வெளி வீரர்களின் தினசரி உணவு உட்கொள்ளல் மருத்துவர்களால் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் ஒரு நாளைக்கு 3.8 பவுண்டுகள் (சுமார் 1.7 கிலோ) உணவும், பணியைப் பொறுத்து கூடுதல் பொருட்களும் ஒதுக்கப்படுகின்றன.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தண்ணீர் குடித்தாரா?
அனைத்து உணவுகளையும் பூமியில் இருந்து தயார் செய்து விண்வெளிக்கு அனுப்புகிறார்கள். விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்கள் அவற்றைச் சூடாக்கிச் சாப்பிடுகிறார்கள். குடிப்பதற்குத் தேவையான தண்ணீரை தங்கள் சிறுநீர் மற்றும் வியர்வையில் இருந்துதான் பெறுகிறார்கள். விண்வெளி நிலையத்தின் மறுசுழற்சி அமைப்பு எந்த உணவும் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், விண்வெளி வீரர்களின் வியர்வை மற்றும் சிறுநீரை குடிநீராகவும் மாற்றிக் கொடுக்கிறது.
59 வயதான திருமதி வில்லியம்ஸ், முதலில் எட்டு நாள் பயணத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். அவருடன் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக 9 மாதங்களாக அங்கேயே தங்கினர். இப்போது டிராகன் என்ற ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இவரும் பூமிக்குத் திரும்புகின்றனர். நாளை மதியம் அவர்கள் பூமியை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.