ARTICLE AD BOX
நீரிழிவு நோய் என்பதை மிகப்பெரிய நோயாக கருதாமல் சிறிய குறையாக எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் மோகன் அறிவுறுத்துகிறார். இன்சுலின் சரியாக சுரக்காதது மற்றும் சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது போன்ற காரணங்களால் தான் நீரிழிவு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, நீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் மோகன் அறிவுறுத்துகிறார். தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் மாவுச் சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.
இதனால் சர்க்கரை அளவு பராமரிப்பதில் சிக்கல் உருவாகிறது. உடல் எடையும் அதிகரிக்கிறது. கீரை வகைகள், பீன்ஸ், கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும், கிழங்கு வகையிலான காய்கறிகளை தவிர்த்து விடலாம்.
காய்கறிகளில் மாவுச் சத்து, கலோரிகள் ஆகியவை குறைவாக இருக்கிறது. எனினும், இவற்றை சாப்பிடும் போது வயிறு நிறைந்து விடுகிறது. இதேபோல், ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு மற்றும் கொய்யாப்பழங்களை அளவுடன் சாப்பிடலாம். ராஜ்மா, பன்னீர், காளான் போன்ற பொருட்களை புரதத்திற்காக எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன், சிக்கன் போன்றவற்றில் இருந்து இவை கிடைத்து விடும்.
இந்த சூழலில் சிலர் 'சீரோ கார்ப்ஸ்' உணவு முறையை பின்பற்றுவார்கள். அதன்படி, மாவுச் சத்து இருக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். ஆனால், அந்த முறையில் தீங்குகள் இருப்பதாக மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளார். இப்படி செய்யும் போது உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து விடும் என்று அவர் கூறுகிறார். இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இருதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அதன்படி, சிறிய அளவில் கார்போஹைட்ரேட், அதிக அளவில் புரதம் மற்றும் காய்கறிகள், சிறிதளவு எண்ணெய் என்ற விகிதத்தில் நம் உணவு இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என மருத்துவர் மோகன் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.