ARTICLE AD BOX
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தததாக புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக சீமான் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினார். அவரிடம் கோயம்பேடு காவல் இணை ஆணையர் அதிவீரபாண்டியன், வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அன்புக்கரசு ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விஜயலட்சுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் 53 கேள்விகளை எழுப்பி சீமானிடம் கிடிக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
சீமானிடம் இரவு 10 மணிக்கு தொடங்கிய விசாரணை 11.15 மணி அளவில் நிறைவு பெற்றது. விசாரணை முழுவதும் வீடியோ மூலம் காவல்துறையினர் பதிவு செய்தனர். இதனிடையே, நடிகை பாலியல் புகார் தொடர்பாக மீண்டும் சம்மன் அனுப்பி சீமானிடம் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணையின்போது மேலும் பல கேள்விகளை கேட்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விசாரணையின்போது பழைய கேள்விகளையே கேட்டதாகவும், புதிய கேள்விகள் எதுவும் இல்லை என்றும் கூறினார். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.