ARTICLE AD BOX
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் போஷான் நகரில் த்ரீ பிரதர்ஸ் மெஷின் உற்பத்தி என்ற நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும் கடந்த 11ஆம் தேதி முதல் கழிவறையைப் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், காலை 8 மணிக்கு முன்பும், காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் 3.40 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கூடுதல் நேரம் வேலை செய்பவர்கள் இரவு 9 மணிக்கு பிறகு எவ்வளவு நேரமானாலும் கழிப்பிடங்களை பயன்படுத்தலாம். ஆனால் மற்ற நேரங்களில் கழிப்பறையை பயன்படுத்த வேண்டுமானால் 2 நிமிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒருவேளை உடல்நலக் கோளாறுகள் இருந்தால் நிறுவனத்தின் ஹெச்.ஆரிடம் அனுமதி பெற்றுதான் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். அத்துடன் அந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி ஊழியர்களை கண்காணிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விதிகளை மீறும் ஊழியர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.1,200 அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறை இந்த மாத இறுதி வரை சோதனை ஓட்டமாக நடத்தப்படுகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த விதி முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இது தனியுரிமையை பறிக்கும் செயல் என ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து சட்ட நிபுணர்கள், ”பணி, ஊதியம், ஓய்வு நேரம் ஆகியவற்றில் மாற்றம், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் ஊழியர்களிடம் அறிவிக்கப்பட வேண்டும். ஊழியர்களும் அவர்களுடைய நலனுக்காக இதுபோன்ற புதிய நடைமுறைகளை எதிர்க்க உரிமை உள்ளது” என தெரிவிக்கிறார்கள்.
முன்னதாக, அண்மையில் தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லிக்சன் டியான்ஷெங் என்ற நிறுவனம் தங்கள் ஊழியர்கள் கழிவறைக்குச் சென்றுவர நீண்டநேரம் எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை அளித்தது. அதாவது, அவர்கள் கழிவறையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை எடுத்து சுவரில் ஒட்டியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், அப்படங்களை நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.