ARTICLE AD BOX
வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியங்களில் இலவம் பஞ்சு சீசன் துவங்குவதற்கு முன்பாகவே மரங்களிலேயே பஞ்சு வெடிப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு விவசாயம் நடந்து வருகிறது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் மரங்களில் இருந்து இலவம் காய்கள் பறிக்கும் பணிகள் நடைபெறும். சீசன் தொடங்க ஒரு மாதம் உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே மரங்களில் இலவம் பிஞ்சு உற்பத்தி அதிகளவில் இருந்தது. அப்ேபாது அப்பகுதியில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக மரங்களில் இருந்து பெரும்பாலான பிஞ்சுகள் உதிர்ந்து கீழே விழுந்து விட்டன. இதன் காரணமாக தற்போது மரங்களில் இலவம் காய்கள் உற்பத்தி மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், காய்கள் மரங்களிலேயே வெடிப்பதால், பஞ்சு காற்றில் பறந்து விடுகிறது. ஒவ்வொரு மரத்திலும் குறிப்பிட்ட அளவில் காய்கள் வெடித்து வருவதால், அதனை பணியாளர்கள் மூலம் பறித்தாலும், அவர்களின் சம்பளத்துக்கு கூட வருவாய் கிடைக்காது. இதனால் விவசாயிகள் அந்த காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மிக குறைந்த விலைக்கே இலவம் பஞ்சு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்தாண்டு பருவநிலை மாற்றம் காரணமாக இலவம் காய்களின் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. கனமழையால் இலவம் பிஞ்சுகள் உதிர்ந்து விட்டநிலையில், தற்போது வெயில் தாக்கம் காரணமாக இலவம் காய்கள் மரத்திலேயே வெடிக்க தொடங்கியுள்ளது.
எனவே அடுத்த மாதம் சீசன் தொடங்கும்போது, மரங்களில் உள்ள குறைந்தளவிலான காய்களை பறித்தாலும் அது பணியாளர்களின் சம்பளத்திற்கே பற்றாத சூழ்நிலையில் உள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளாக இலவம் பஞ்சு விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இலவம் பஞ்சுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
The post சீசன் துவங்கும் முன்பு மரங்களிலேயே வெடிக்கும் இலவம் பஞ்சு: கடமலை-மயிலை விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.