ARTICLE AD BOX
அந்தப் பள்ளிக்கூடத்தில் வகுப்புகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றான கிரிக்கெட் போட்டிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சுற்றிலும் மாணவ ரசிகர்கள் ஆர்ப்பரிக்க விறுவிறுப்பாக நடைபெற்றது போட்டி.
சுந்தரேசன் தன் அணியின் சார்பாக பேட்டிங்கில் இறங்கினான். எதிர் அணியின் ரகோத்தமன் பந்து வீசினான். வெகு அநாயசமாகத் தன்னை நோக்கி வந்த பந்துகளை விளாசி, ரன்களைக் குவித்தான் சுந்தரேசன். ரன் எண்ணிக்கை கூடக்கூட, கொஞ்சம் கர்வமாகவும் உணர்ந்தான். அதனால் அடுத்த பந்தை சரியாக அனுமானிக்காமல், எல்.பி.டபிள்யூ அவுட் ஆனான். ஆனால் அதை ஏற்க மறுத்து வாதிட்டான். ரகோத்தமனோ ‘அவுட்‘தான் என்று ஆணித்தரமாக எதிர்வாதம் செய்ய, சுற்றி நின்ற அவனுடைய நண்பர்களும், ‘அவுட்‘ என்றே ஆரவாரம் செய்தார்கள். அம்பயரும் அவுட் கொடுக்க, கோபம் மூண்டது சுந்தரேசன் மனதில். க்ளீன் போல்டு, கேட்ச் அவுட் என்றால் அதற்கு அப்பீலே இல்லை.
ஆனால் எல்.பி.டபிள்யூ அவுட் சந்தேகத்துக்குட்பட்டது. தொழில் ரீதியான மேட்ச் என்றால், தேர்டு அம்பயர், காமிரா கணிப்பு என்று தீர்ப்புக்குப் போகலாம். ஆனால் இங்கே..? தான் அவுட் ஆனது சரியானதுதான் என்று தெரிந்தாலும், வாதாடிப் பார்த்து அவுட்டிலிருந்து தப்பித்து மேலும் ரன்கள் சேர்க்கலாமே என்பது, சுந்தரேசனுடைய ஏமாற்று ஆசையாக இருந்தது.
ஆனால் ‘அவுட்‘தான் என்பது உறுதியாகிவிட்டதால், வெறுப்புடன் களத்தை விட்டு வெளியேறினான். தன்னை அவுட் ஆக்கிய ரகோத்தமன் மீது செம கோபம் அவனுக்கு. அவனை எப்படியாவது பழி வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். எப்படி? விளையாட்டு மூலமாகவா? இல்லை, வன்முறை மூலமாக!
இந்தக் கொடிய எண்ணத்தால் தூண்டப்பட்ட அவன், பள்ளிக்கூடம் முடிந்து அனைவரும் தத்தமது வீடுகளுக்குப் புறப்பட்டபோது, ரகோத்தமன் மேல் யதேச்சையாகப் படுவதுபோல விழுந்து அவனைக் கீழே தள்ளி விட்டான். எதிர்பாராத இந்த தாக்குதலால் கீழே விழுந்த ரகோத்தமனுக்கு முட்டியில் ரத்தக் காயமே ஏற்பட்டது. அதைப் பார்த்ததும் சுந்தரேசனுக்கு பயம் வந்து விட்டது. ரத்தம் ஒழுக, காலை விந்தி விந்தி நடந்த ரகோத்தமன், தன் ரஃப் நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு பேப்பரைக் கிழித்து அதனால் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டான். இதைப் பார்த்தும் சுந்தரேசன் மனம் வேதனைப்பட்டது.
அதேநேரம், ரகோத்தமனின் அம்மா அவனை வீட்டுக்கு அழைத்துப் போக வந்தார். ‘சரிதான், இன்னிக்கு நாம வசமா மாட்டிக்கிட்டோம்; அவன், அம்மாகிட்ட, நான் கீழே பிடிச்சுத் தள்ளினதைச் சொல்வான்; அவங்க எங்க கிளாஸ் டீச்சர்கிட்ட ரிப்போர்ட் பண்ணுவாங்க; என் கை முட்டி ஒடியப் போகுது’ என்று நினைத்து கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான் சுந்தரேசன்.
எதிர்பார்த்தபடியே, ‘‘கால்ல என்னடா காயம்?’‘ என்று கேட்டு அம்மா பதறினார்.
சுந்தரேசன் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு ரகோத்தமன் என்ன சொல்லப் போகிறானோ என்பதை கவனித்தான். மனசுக்குள் படபடவென்று பயம்.
‘‘படியிலே எறங்கும் போது தடுக்கி விழுந்துட்டேம்மா!‘’ என்று ரகோத்தமன் சொன்னான். சுந்தரேசனுக்கு ஆனந்த அதிர்ச்சி.
‘‘என்ன அவசரம், மெதுவாத்தான் வந்தால் என்னவாம்? சரி, வா, போற வழியில டாக்டரைப் பார்த்துட்டுப் போகலாம்,‘’ என்று அவனைக் கடிந்து கொண்ட அம்மா, தன் ஸ்கூட்டரின் பின்னால் அவனை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். திரும்பி, சுந்தரேசனைப் பார்த்த ரகோத்தமன், நட்பாக மலர்ந்து சிரித்து, கையாட்டி ‘டாட்டா‘ சொன்னான்.
சுந்தரேசனுக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய்விட்டது. ‘விளையாட்டை விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வெற்றி, தோல்வி என்பது பொதுவானது; பகை வளர்த்துக் கொள்ளக் கூடாதது,’ என்பதைப் புரிந்து கொண்டான் அவன்.
பின்னாளில், இந்த மனப் பக்குவத்தாலேயே அவன் சிறந்த கிரிக்கெட் வீரனாகவும் திகழ்ந்தான். அதோடு, ரகோத்தமனுடன் இணை பிரியாத நட்பை பல்லாண்டுகளுக்கு வளர்த்துக் கொண்டான்.